புதுடெல்லி:மேற்குவங்காளத்தில் வீசிய மம்தா சூறாவளியில் 34 ஆண்டுகாலமாக நிலைப்பெற்றிருந்த சிவப்புக்கோட்டை தகர்ந்துபோனது. முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா போன்றவர்களின் தலைகளை உருட்டிய திரிணாமுல்-காங்கிரஸ் கூட்டணி 4-இல் 3 பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது.
முப்பதாண்டுகளுக்கு மேலாக நீண்ட இடதுசாரிகளின் யுகத்திற்கு துயரமான முடிவை அளித்துவிட்டு மம்தா பானர்ஜியின் தலைமயிலான கூட்டணி மேற்குவங்காளத்தில் வெற்றிக்கொடியை நாட்டியுள்ளது. மொத்தம் 294 இடங்களில் திரிணாமுல்-காங்கிரஸ்-எஸ்.யு.ஸி.ஐ கூட்டணி 226 இடங்களை கைப்பற்றியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸிற்கு 180 இடங்கள் கிடைத்த பொழுது காங்கிரஸ் கட்சி 40 இடங்களிலும் எஸ்.யு.ஸி.ஐ இரண்டு இடங்களிலும் வெற்றிப்பெற்றுள்ளன.
2006-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 235 இடங்களை கைப்பற்றிய சி.பி.எம் 38 இடங்களை பெற்று பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.கூட்டணி கட்சிகளான ஃபார்வர்டு ப்ளாக் 10 இடங்களையும், ஆர்.எஸ்.பி ஆறு இடங்களையும், சி.பி.ஐ ஒரு இடத்திலும் வெற்றிப்பெற்றுள்ளன.
வரலாறு படைத்த வெற்றியைப்பெற்ற மம்தா பானர்ஜி நேற்று மாலை ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் எம்.கே.நாராயணனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா முன்னர் ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
34 ஆண்டுகால இடதுசாரிகள் ஆட்சிக்கு முடிவுகட்டிய அமோக வெற்றிக்கு திரிணாமுல்,காங்கிரஸ் கட்சிகளின் தொண்டர்கள் பட்டாசுக்கொளுத்தியும், நடனமாடியும், பாட்டுப்பாடியும் கொண்டாடினர். பாரபட்சமற்ற மேம்பட்ட ஆட்சியை தருவேன் என தனது வீட்டிற்கு முன்னால் திரண்டிருந்த தொண்டர்களிடம் உரை நிகழ்த்திய மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
அலீமுத்தீன் தெருவில் சி.பி.எம் தலைமையகத்தில் சோகமான சூழல் நிலவியது. தேர்தல் முடிவுகள் குறித்து விவாதிக்க கட்சியின் செகரட்டரியேட் கூடியது. தனியாக ஆட்சியமைக்க பெரும்பான்மை உள்ளது என்றாலும் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் எஸ்.யு.ஸி.ஐ யும் அமைச்சரவையில் சேர மம்தா அழைப்பு விடுத்துள்ளார்.

0 கருத்துரைகள்:
Post a Comment