பரங்கிப்பேட்டை அருகே அன்னங்கோவிலில், நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 25 மீன் கம்பெனிகள் முழுவதும் எரிந்து சாம்பலாயின. ரூபாய் 1 கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.
தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி கடலோர பகுதிகளில் 45 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் விதிக்கப்பட்டுள்ளதால், விசைப்படகுகள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்வதிலை. சாதாரண படகுகளில் பிடித்து வரப்படும் மீன்கள், பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் முகத்துவாரப் பகுதியில் விற்பனை செய்யப்படுகின்றன.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர், மீன் வியாபாரிகளுக்கும், விசைப்படகு சங்கத்தினருக்கும், மோதல் ஏற்பட்டது. அதில், மீன் வியாபாரிகளுக்கு சொந்தமான 6 மினி லாரிகள் அடித்து நொறுக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, சிதம்பரம் தாசில்தார் ராஜேந்திரன் தலைமையில் சமாதானக் கூட்டம் நடத்தப்பட்டு, கடந்த 6ம் தேதி முதல் வெளியூர் மீன்களை வழக்கம் போல் வாங்குவது என, முடிவு செய்யப்பட்டது.
நேற்று முன்தினம் சனிக்கிழமை அன்று, கடலூர் ராசாப்பேட்டை மீனவர்கள் பிடித்து வந்த மீன்களை வாங்க, சாமியார்பேட்டையைச் சேர்ந்தவர்கள் எதிப்பு தெரிவித்ததால், மீண்டும் பிரச்னை ஏற்படும் சூழ்நிலை உருவானது. தக்க சமயத்தில் காவல்துறையினர் தலையிட்டு, இரு பிரிவினர்களுக்கும் சமரசம் செய்து வைத்தனர்.
இந்நிலையில் நேற்று ஞாயிறு அன்று, பரங்கிப்பேட்டை அன்னங்கோவிலில்,பன்னீர் என்பவரின் மீன் கம்பெனி திடீரென தீப்பிடித்து எரிந்தது. காற்று பலமாக வீசியதால், அடுத்தடுத்த மீன் கம்பெனிகளுக்கும் தீ பரவியது. ஒரே நேரத்தில் 25 மீன் கம்பெனிகளும் கொழுந்துவிட்டு எரிந்தன. இதனால் அப்பகுதி முழுவதும் ஒரே புகை மூட்டமாகக் காணப்பட்டது.
கடலூர், சிதம்பரம், பரங்கிப்பேட்டை ஆகிய ஊர்களிலிருந்து தீயணைப்பு படை வண்டிகள் வரவழைக்கப்பட்டன. கொழுந்து விட்டெரியும் தீயை அணைக்க பெரிதும் சிரமப்பட்டனர்.இந்த விபத்தில், அரவிந்தன், கணேசன், சிவலிங்கம், சுதர்சன், பிரபாகரன், கோகுல பாலன் உட்பட 25 மீன் வியாபாரிகளின் கம்பெனிகள் முழுவதும் எரிந்து சாம்பலாயின. இத் தீ விபத்தில், மீன் கம்பெனிகளில் வைக்கப்பட்டிருந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன் பாக்ஸ்கள், ஐஸ் பாக்ஸ், எடை மிஷின் மற்றும் மீன்கள் முற்றிலும் சேதமடைந்தன.
அப்பகுதியிலிருந்த இரண்டு டீ கடை, மூன்று பெட்டிக் கடைகளும் சேதமடைந்தன. அச்சமயம் காஸ் சிலிண்டர் ஒன்று வெடித்ததால், பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவலறிந்த ஆர்.டி.ஓ. இந்துமதி, பரங்கிப்பேட்டை பேரூராட்சித் தலைவர் முகமது யூனுஸ் ஆகியோர், சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டு, உடனடி பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். பரங்கிப்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


0 கருத்துரைகள்:
Post a Comment