லண்டன்,ஜன.12:அமெரிக்க தூதரகச் செய்திகள் தொடர்பான கூடுதல் விபரங்களை உடனடியாக வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை வலுப்படுத்தியதாக விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அஸான்ஜே தெரிவித்துள்ளார்.
பலத்த பாதுகாப்பைக் கொண்ட லண்டனில் பெல்மாஷ் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்திற்கு வெளியே வைத்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிக்கவே இதனை தெரிவித்தார் அவர்.
கடந்த ஆண்டு இறுதியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க தூதரக ரகசியங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், நியூயார்க் டைம்ஸ், கார்டியன், டெர் ஸ்பீகல், லெ மொந்தே, எல் பாரிஸ் ஆகிய பத்திரிகைகள் மூலமாக ரகசியங்கள் வெளியாவது பல்வேறு காரணங்களால் சமீபத்தில் மந்தநிலையை அடைந்திருந்தது.
ஆனால், இதில் உடனடியாக மாற்றம் வரும் என்றும், சிறிய பத்திரிகைகள் முதல் ஏராளமான கூட்டாளிகளை தாங்கள் கண்டறிந்துள்ளதாகவும் அஸான்ஜே தெரிவித்தார்.
சுவீடனில் இரண்டு பெண்களின் பாலியல் பலாத்கார வழக்குத் தொடர்பாக கைதுச் செய்யப்பட்ட அஸான்ஜே ஜாமீனில் விடுதலைச் செய்யப்பட்ட பிறகு கிழக்கு இங்கிலாந்தில் ஒரு வீட்டில் பலத்த கண்காணிப்பிற்கு மத்தியில் வசித்துவருகிறார்.
இவ்வழக்கில் சுவீடனிடம் அஸான்ஜேவை ஒப்படைப்பது தொடர்பான வாதங்களைக் குறித்து தீர்மானிப்பதற்காக அஸான்ஜே நீதிமன்றத்திற்கு வருகைத்தந்தார். 10 நிமிட நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு பிறகு அவர் கிளம்பினார். பிப்ரவரி ஏழாம் தேதி இவ்வழக்கில் தொடர் விசாரணை நடைபெறும்.
செய்தி:பாலைவனதூது
0 கருத்துரைகள்:
Post a Comment