அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவாக பொதுமக்கள், அரசியல்வாதிகள் முதலானோரிடமிருந்து கையெழுத்து பெற்று ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க, குமரி மாவட்ட பாஜக கையெழுத்து வேட்டை நடத்தி வருகிறது. இதன் ஆரம்பமாக, நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதி திமுக உறுப்பினர் ஹெலன் டேவிட்சனைச் சந்தித்து கையெழுத்து கேட்டுள்ளனர். ஹெலன் டேவிட்சனும் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் கையெழுத்திட்டுக் கொடுத்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, திமுகவுக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியது.
விஷயம் திமுக தலைமைக்குக் கிடைத்த உடன், ஹெல்ன் டேவிட்சனிடம் திமுக தலைமை விளக்கம் கேட்டது. உடன், "ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவாகத் தான் கையெழுத்திடவில்லை எனவும் தொகுதி எம்பி என்ற முறையில் தன்னிடம் கொடுக்கப்பட்ட மனுவைப் பெற்றுக்கொண்டதற்கான ஒப்புதல் கையெழுத்தே தான் போட்டுக்கொடுத்ததாகவும்" ஹெலன் டேவிட்சன் மறுப்பு வெளியிட்டார். தொடர்ந்து குமரி மாவட்ட பாஜக தலைவர்களுள் ஒருவரான பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினர் வேலாயுதனும் ஹெலன் டேவிட்சன் கூறியது தான் சரி; அவர் ராமர் கோவில் கட்ட கையெழுத்து ஏதும் இடவில்லை என்று மறுப்பு வெளியிட்டார்.
இம்மறுப்பு வந்த நிமிடத்திலேயே மற்றொரு பாஜக தலைவரான நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினர் ராதா கிருஷ்ணன், "ஹெலன் டேவிட்சன் எம்பி ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவு தெரிவித்துத் தான் கையெழுத்து போட்டார். பாஜக தலைவர் வேலாயுதன் என்ன கூறினார் என்பது தெளிவாக தெரியவில்லை. ஹெலனால் திமுகவுக்கு ஏற்பட்ட சிக்கலைச் சமாளிக்கவே அவர் அவ்வாறு கையெழுத்திடவில்லை என்று மறுப்பு தெரிவிக்கின்றனர். எந்த ஒரு எம்பியாவது தன்னிடம் வழங்கப்படும் புகார் மனுக்களைப் பெற்றுக்கொண்டதற்கு ஒப்புதல் கையெழுத்துப் போட்டுக் கொடுப்பரா? ஹெலன் இது போன்று தன்னிடம் மனுகொடுத்த எத்தனை பேருக்கு அவ்வாறு ஒப்புதல் கையெழுத்துப் போட்டுக்கொடுத்துள்ளார் என்பதைத் தெரிவிக்க முடியுமா?" என்று காட்டமாக அறிக்கை வெளியிட்டார்.
ஹெலன் மூலமாக மறுப்பறிக்கை வெளியிட்டு, பிரச்சனையிலிருந்து தப்பி விடலாம் எனக் கணக்குபோட்ட திமுக தலைமைக்குப் பெரும் தலைவலி தரும் வகையில், தற்போது ஹெலன் டேவிட்சன் எம்பிக்கு எதிராக குமரி மாவட்ட சிறுபான்மை மக்களிடையே எதிர்ப்பு வலுக்க ஆரம்பித்துள்ளது. மாவட்டம் முழுவதும் அவருக்கு எதிராக கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அத்துடன் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்னிலையில் ஹெலன் டேவிட்சனைப் பதவி விலகக் கோரி முற்றுகை போராட்டம் நடத்தவும் சில சிறுபான்மை அமைப்புகள் முடிவு செய்துள்ளன..
செய்தி:இந்நேரம்
0 கருத்துரைகள்:
Post a Comment