ஈரான் நாட்டில் கடைசி நேரத்தில் தூக்கு கயிறில் இருந்து குற்றவாளியைக் காப்பாற்றிய கொல்லப்பட்ட நபரின் தாய்! என்ற செய்தி கடந்த வாரம் ஊடகங்களிலும், சமூக இணையதளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.யார் அந்த தாய்? தனது மகனை கொன்றவனுக்கு மன்னிப்பு வழங்க அந்த அன்னைக்கு எவ்வாறு முடிந்தது? என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்தது.
2007-ஆம் ஆண்டு தெருச் சண்டை ஒன்றில் அப்துல்லாஹ் ஹுஸைன் ஸாதிக் என்ற தனது நேசத்திற்குரிய மகனை பறிகொடுத்து தீராத துக்கத்தை சுமந்துகொண்டு வாழ்ந்த ஸமீரா அலி நஜாத் என்ற அந்த அன்னைக்கு மீண்டும் ஒரு பேரிடி.நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் விபத்து ஒன்றில் தனது இளைய மகனையும் பறிகொடுத்தார்.இது என்ன சோதனை? துயரத்தின் தீரா நினைவுகளை சுமந்துகொண்டு இரவு,பகல்களை கழித்து வந்தபோதுதான் 7 ஆண்டுகளுக்கு முன்னர் தனது மகன் அப்துல்லாஹ்வை கொலைச் செய்த குற்றவாளிக்கு நீதிமன்றம் மரணத்தண்டனை விதித்த செய்தி அவருக்கு கிடைத்தது.