தமிழகத்தில் வகுப்புக் கலவரங்கள் அதிகரித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 2013-ஆம் ஆண்டில் முந்தைய ஆண்டை விட வகுப்புக் கலவரங்கள் 25 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முஸஃபர் நகர் கலவரம் உள்ளிட்ட பெரிய கலவரங்கள் நடந்த உத்தரபிரதேச மாநிலம் கலவரங்களில் முன்னணியில் உள்ளது. இங்கு கடந்த 2012-ஆம் ஆண்டு 118 கலவரங்கள் நடந்துள்ளன. 2013-ஆம் ஆண்டு 247 ஆக கலவரங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், பீகார், குஜராத், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கலவரங்கள் அதிகரித்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கைப்படி; தமிழகத்தில் 2012-ஆம் ஆண்டு 14 கலவரங்களில் 2 பேர் பலியாகினர். 2013-ஆம் ஆண்டு 36 கலவரங்கள் நடந்துள்ளன. இதில் 3 பேர் கொல்லப்பட்டு 85 பேருக்கு காயம் ஏற்பட்டது.
2013-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் 68 கலவரங்கள் நடந்துள்ளன. இதில் 10 பேர் கொல்லப்பட்டனர். 2012-ஆம் ஆண்டு நடந்த 57 கலவரங்களில் 5 பேர் கொல்லப்பட்டனர். 2012-ஆம் ஆண்டு கர்நாடகாவில் 69 கலவரங்கள் நடந்துள்ளன. 2013-ஆம் ஆண்டு அங்கு 73 கலவரங்கள் நிகழ்ந்துள்ளன.
தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் வகுப்பு துவேச பிரச்சாரங்கள் நடத்தியதே கலவரங்கள் அதிகரிக்க காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பீகார் மாநிலத்தில் 2013-ஆம் ஆண்டு 63 கலவரங்கள் நடந்துள்ளன. இதில் 7 பேர் கொல்லப்பட்டனர். 283 பேருக்கு காயம் ஏற்பட்டது. 2012-ஆம் ஆண்டு இங்கு 21 கலவரங்களில் 3 பேர் பலியாகினர். 172 பேருக்கு காயம் ஏற்பட்டது.
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் 2013-ஆம் ஆண்டு 88 கலவரங்களில் 12 பேர் பலியாகினர். 352 பேருக்கு காயம் ஏற்பட்டது. அதேவேளையில் மகாராஷ்ட்ராவில் கலவரங்கள் குறைந்து வருவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தானில் கலவரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. 2012-ஆம் ஆண்டைப் போலவே 52 கலவரங்கள் 2013-ஆம் ஆண்டிலும் ராஜஸ்தானில் நடந்துள்ளது. அதேவேளையில் மரண எண்ணிக்கை 2012-ஆம் ஆண்டு 10 ஆக இருந்தது. 2013-ஆம் ஆண்டு 2 ஆக குறைந்துள்ளது.
கேரளாவில் வகுப்புவாத குணம் கொண்ட மோதல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 2012-ஆம் ஆண்டு 56 கலவரங்கள் நடந்துள்ளன. 2013-ஆம் ஆண்டு 41 ஆக குறைந்துள்ளது. ஆந்திரபிரதேச மாநிலத்திலும் கலவரங்கள் குறைந்துள்ளன.
Source : Newindia.tv
0 கருத்துரைகள்:
Post a Comment