Monday, April 28, 2014

நாட்டை ஆள பரந்த மனமே தேவை! – மோடிக்கு பிரியங்கா பதிலடி!

“நாட்டை ஆட்சி செய்வதற்கு மிகப் பெரிய மனமே தேவை. 56 அங்குலம் கொண்ட நெஞ்சு தேவையில்லை” என்று பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா பதில் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் சோனியா காந்தியை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

கோரக்பூரில் மோடி பேசும்போது, உத்தரப் பிரதேசத்தை குஜராத்தாக மாற்றுவதற்கு 56 அங்குலம் கொண்ட நெஞ்சு தேவை என தெரிவித்துள்ளார். இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு 56 அங்குல அகலம் கொண்ட நெஞ்சு தேவையில்லை. நாட்டை ஆள்வதற்கு மிகப் பெரிய மனமே தேவை. இந்த நாட்டை ஆள்வதற்கு முரட்டுத்தனமான சக்தி தேவையில்லை. அதற்குப் பதிலாக தார்மிக மற்றும் உள்மன சக்தியுமே தேவை.
இந்த நாடு, மகாத்மா காந்தியின் நாடாகும். இந்த நாட்டின் சுதந்திரத்துக்காக ஹிந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள்,
கிறிஸ்தவர்கள், புத்தர்கள், ஜைனர்கள் என அனைத்து மதத்தினரும் தங்களது உயிரைத் தியாகம் செய்துள்ளனர். தலித்துகள், பழங்குடியின மக்களும் தங்களது உயிரை நாட்டின் சுதந்திரத்துக்காக தியாகம் செய்துள்ளனர்.
இந்த நாடு, மக்களுக்கு சொந்தமானது. மக்களே இந்த நாட்டின் பாதுகாவலர்கள். இது எனது நாடு. எனது உடலில் ஓடும் ரத்தத்தில் இந்த நாட்டின் மண்ணும் கலந்துள்ளது. இந்த நாட்டையும், எனது குடும்பத்தின் தர்மத்தையும் பாதுகாக்க வேண்டியது உங்களின் (ரேபரேலி தொகுதி மக்கள்) கடமை ஆகும்.
வரும் 30ஆம் தேதி வாக்களிக்கச் செல்லும்போது, உங்களுக்காக நீங்கள் (ரேபரேலி தொகுதி மக்கள்) வாக்களிக்கக் கூடாது. நாடு வலுப்பட வேண்டும், நாடு தொடர்ந்து ஒற்றுமையுடன் திகழ வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு வாக்களிக்க வேண்டும். உங்கள் பார்வை குறுகிய வட்டத்துக்குள் அடங்கி விடக் கூடாது. விரிவுபடுத்தப்பட்டதாக இருக்க வேண்டும். எந்த மாதிரியான நாடு உங்களுக்கு தேவை என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு பிரியங்கா பேசினார்.
Source: thoothuonline.com

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza