டெல்லி - தீவிரவாத முத்திரைக் குத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் வழக்குகளை விசாரிப்பதற்காக சிறப்பு படைப்பிரிவு அமைக்கப்பட வேண்டும் என அமைச்சர் ரஹ்மான் கான் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அரசாங்கம் இவ்வாறான சிறப்புப்பிரிவினை உருவாக்கியிருப்பதை சுட்டிக் காட்டியுள்ள சிறுபான்மைத் துறை அமைச்சர் ரஹ்மான் கான், இது சம்பந்தமாக பிரதமருக்கும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்திக்கும் கடிதம் எழுதுவதாக தெரிவித்துள்ளார். இவ்வாறு சிறப்புப் பிரிவு அமைத்து விசாரணை நடத்துவது சிறுபான்மையினரின் நம்பிக்கையைப் பெறுவதாக அமையும் எனக் குறிப்பிட்டார்.
10 ஆண்டுகளுக்கும் மேலாக பல அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் சிறையில் வாடுவதைக் குறிப்பிட்ட ரஹ்மான் கான், ” நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமாக எச்சரிக்கையாக இருக்கும் அதே நேரத்தில், அப்பாவி மக்கள் தண்டிக்கப்படவும் கூடாது” என்றும் ” நீதி தாமதப்படவோ மறுக்கப்படவோ கூடாது ” எனவும் தெரிவித்தார்.
உயர் அதிகாரம் கொண்ட ஒரு குழு இவ்வாறான விசாரணைகளை ஆய்வு செய்தால், கைது செய்யும் அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருக்கும் என அமைச்சர் தெரிவித்தார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடிய ஒருவர் குற்றமற்றவர் என விடுதலை செய்யப்படுவது மனித உரிமை மீறலாகும் எனக் குறிப்பிட்டார். ஒருவரின் வாழ்க்கையினை இது மிகவும் பாதிப்புக்குள்ளாகி விடுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
Info: inneram.com
0 கருத்துரைகள்:
Post a Comment