கொச்சி:கேரள மாநில சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கட்சியின் துணைத் தலைவர் முவாற்றுப்புழா அஷ்ரஃப் மெளலவி. இவர் 10 தினங்கள் வளைகுடா நாடான கத்தருக்கு சென்றுவிட்டு நேற்று கொச்சி நெடும்பாச்சேரி விமான நிலையம் வழியாக நாடு திரும்பினார்.
நேற்று காலை விமான நிலையத்திற்கு வந்த அஷ்ரஃப் மெளலவியை எமிக்ரேசன் பிரிவு கைதுச் செய்து உள்ளுர் காவல் துறையிடம் ஒப்படைத்தது. அஷ்ரஃப் மெளலவியை போலீஸ் தேடிவருவதாகவும், இவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
ஆனால், எந்த ஏஜன்சி லுக் அவுட் நோட்டீஸை வெளியிட்டது என்பது தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் முவாற்றுப்புழாவில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு கொண்டுச் செல்லப்பட்ட அஷ்ரஃப் மெளலவியை மதியம் 12.30 மணியளவில் போலீஸ் நிபந்தனையின்றி விடுதலைச் செய்தது. கத்தருக்கு செல்லும் வேளையில் அஷ்ரஃப் மெளலவிக்கு விமான நிலையத்தில் எவ்வித இடையூறும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கண்டனப் போராட்டம் நடத்தியது தொடர்பாக முவாற்றுப்புழா மற்றும் திருவனந்தபுரத்தில் வழக்குகள் அஷ்ரஃப் மெளலவி மீது பதிவுச்செய்யப்பட்டுள்ளதாக அற்ப காரணங்களை கூறி போலீஸ் சமாளித்தது. ஆனால், இவ்வழக்குகளில் ஏற்கனவே அவர் ஜாமீன் பெற்றுள்ளதை போலீஸ் மூடி மறைத்தது.
அஷ்ரஃப் மெளலவியை கைதுச் செய்த உடன் சில தனியார் தொலைக்காட்சி சேனல்கள், கேரளாவில் பேராசிரியர் ஒருவரின் கைவெட்டு சம்பவம் தொடர்பாக அவர் 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார் என்று பொய்யான செய்திகளை வெளியிட்டன.
அஷ்ரஃப் மெளலவியை கைதுச்செய்ததைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் கண்டனப்போராட்டங்களையும், சட்டப்பேரவையை நோக்கி பேரணியும் நடத்த எஸ்.டி.பி.ஐ ஏற்பாடுச்செய்தது.
இந்நிலையில் போலீஸ் விடுதலைச் செய்த அஷ்ரஃப் மெளலவிக்கு முவாற்றுப்புழாவில் எஸ்.டி.பி.ஐ தொண்டர்களும், ஊர்மக்களும் சிறப்பான வரவேற்பை அளித்தனர்.
அஷ்ரஃப் மெளலவியை கைதுச் செய்த போலீசிற்கு எஸ்.டி.பி.ஐ கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment