மதுரையிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு ஏர் இந்தியா விமான சேவை துவங்க வேண்டுமென துபாயில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மதுரை வர்த்தக தூதுக்குழு, ஏர் இந்தியா நிறுவனம், தமிழ் அமைப்புகள் இணைந்து துபாயில் ஆலோசனைக் கூட்டம் நடத்தின.
மதுரை முன்னாள் எம்பி ராம்பாபு, தமிழ்நாடு வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன், முதுநிலைத் தலைவர் ரத்தினவேல், சவுராஷ்டிரா தொழில் வர்த்தக சங்க துணைத்தலைவர் பிரபாகரன், பாண்டியன் ஓட்டல் இயக்குநர் வாசுதேவன், துபாய் ஏர் இந்தியா மேலாளர் ராம்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இடிஏ மெல்கோ செயல் இயக்குநர் அகமது மீரான் வரவேற்றார்.
இடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மேலாண் இயக்குநர் செய்யது சலாஹூதீன் தலைமை வகித்து பேசியதாவது:
மதுரையிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு குறிப்பாக துபாய்க்கு நேரடி விமான சேவை துவங்குவதன் மூலம் தென் மாவட்டங்களில் தொழில்வளம் பெருகும். வளைகுடா நாடுகளிலிருந்து சுற்றுலா, மருத்துவ சிகிச்சைக்கு மதுரை வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். மதுரை விமான நிலையத்திலிருந்து போக்குவரத்து நெரிசலின்றி செல்லும் அளவிற்கு சாலை வசதி உள்ளது.
பிற விமான நிலையங்களில் இல்லாத வசதியாகும். துபாய்-மதுரை இடையே நேரடி விமான சேவை துவங்க எங்கள் நிறுவனம் அனைத்து வகையிலும் உதவ தயாராக உள்ளோம் என அவர் பேசினார்.
இதுகுறித்து துபாய் ஏர் இந்தியா நிறுவன மேலாளர் ராம்பாபு பேசுகையில், ‘ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்த புள்ளி விபரங்களின்படி இந்த வழித்தடம் நிச்சயம் லாபகரமாக இயங்கும் என்பதில் சந்தேகமில்லை. இங்கு எடுக்கப்பட்ட முடிவுகள் ஏர் இந்தியா தலைமையகத்திற்கு தெரிவிக்கப்பட்டு மதுரை-துபாய் இடையே நேரடி விமான சேவையை விரைவில் துவங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்’ என்றார்.
முகைதீன் பிச்சை நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஹமீது ரகுமான், மீரான் செய்திருந்தனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment