சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப் பட்ட இலங்கைப் பெண்ணை வேலைக்காக சவூதி செல்ல கடவுச்சீட்டு எடுத்துக்கொடுத்து உதவிய முகவர்கள் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மூதூரிலிருந்து கடந்த 2005ம் ஆண்டு வீட்டுப் பணிப்பெண்ணாக சவூதி அரேபியா சென்ற றிசானா நபீக், அவ்வீட்டு உரிமையாளரின் நான்கு மாத குழந்தை ஒன்றுக்கு புட்டிப்பால் ஊட்டிக் கொண்டிருக்கும் போது அக்குழந்தை உயிரிழந்துள்ளது. இதனை பணிப்பெண் றிசானா திட்டமிட்டு செய்த கொலை என வீட்டு உரிமையாளர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இன்று வரையும் மரண தண்டனைக் கைதியாக சிறையில் வாழ்ந்து வந்த றிசானாவின் விடுதலைக்காக பல்வேறு மட்டங்களிலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.
குறித்த குழந்தையின் குடும்பத்தாரைச் சந்தித்து மன்னிப்பை பெற்றுக்கொள்ள பல தூதுக்குழுக்கள் சவூதி அரேபியா சென்ற போதும் குழந்தையின் தந்தை உட்பட குடும்பத்தார் மன்னிப்பு வழங்கிய நிலையில் குழந்தையின் தாய் மன்னிப்பு வழங்க மறுத்து வந்தார். இந்நிலையில் நேற்று (09/01/2013) புதன்கிழமை சவூதி நேரப்படி காலை 11.44 மணியளவில் றிசானாவுக்கு சவூதி அரேபியாவின் தவாத்மி நகரில் மரண தண்டணை நிறைவேற்றப்பட்டது.
அதேநேரம் குறித்த பணிப்பெண் றிசானா 18 வயது பூர்த்தியாகாத ஒரு இளம் வயதுடையவராவார். அப்பெண்ணுக்கு வயதைக் கூட்டி போலியான முறையில் கடவுச்சீட்டு செய்து சவூதிக்கு அனுப்பிய முகவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதோடு, அவர்களது முகவர் அனுமதிப்பத்திரமும் ரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துரைகள்:
Post a Comment