திருவனந்தபுரம்:ஆர்.எஸ்.எஸ்.ஸையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் கடுமையாகக் கண்டித்துப் பேசிய கேரள மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, “தேசிய அளவில் அவர்கள் மறைமுகக் கூட்டணி சேர்கிறார்கள். வரும் 2014 பாராளுமன்றத் தேர்தலில் அவர்கள் கூட்டணி சேர்வார்கள் என்று யாராவது சந்தேகித்தால் அதில் உண்மை இல்லாமல் இல்லை ” என்று கூறினார். இந்திய வழக்கறிஞர்கள் காங்கிரஸின் மத்திய மாநாட்டைத் துவக்கி வைத்து உரையாற்றும்பொழுது அவர் இதனைக் கூறினார்.
கடந்த வாரம் “கேசரி” மலையாள ஆர்.எஸ்.எஸ். பத்திரிகையில் வெளிவந்த ஒரு கட்டுரை ஹிந்துத்துவ ஃபாசிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும் “நண்பர்களாக” ஒன்று சேர வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தது. (விரிவான செய்திக்கு பார்க்க : தேனிலவில் உலவும் காவியும், செங்கொடியும்!)
ஆனால் “ஆர்.எஸ்.எஸ்.ஸும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நெருங்கி வருகிறது என்பது உண்மையல்ல” என்று அந்தக் கட்டுரைக்கு நேற்று திருவனந்தபுரத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் மறுப்பு தெரிவித்தார் கேரள கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பினராயி விஜயன்.
“இந்தக கள்ளக் கூட்டணியை மறைப்பதற்கு பினராயி விஜயனின் சமாளிப்புதான் இது“ என்று சென்னிதலா குற்றம் சாட்டியுள்ளார். “இது பச்சைப் பொய். கடந்த 4 வருடங்களாக இந்த இரு அமைப்புகள் பரஸ்பரம் கண்டித்துப் பேசியதே இல்லை. கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளிவந்து புதிய கட்சியை ஆரம்பித்த டி.பி. சந்திரசேகரனை கம்யூனிஸ்ட் குண்டர்கள் படுகொலை செய்தனர். இந்தப் படுகொலையை நாட்டிலுள்ள அனைவரும் கண்டித்தனர். ஆனால் பா.ஜ.. இதுவரை கண்டிக்கவில்லை. பா.ஜ.க. தலைவர் ஓ. ராஜகோபால் இதுவரை இந்தப் படுகொலையைக் கண்டிக்கவில்லை” என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
“இவர்கள் கூட்டணிக்கு பல சாத்தியங்கள் உள்ளன. ஏனெனில் இரு அமைப்புகளுமே தங்கள் எதிரிகளை அழித்தொழிப்பு செய்து இல்லாமல் ஆக்க வேண்டும், அரசியலை கிரிமினல் மயமாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவை“ என்று மேலும் குறிப்பிட்ட அவர், “இந்தத் தோழமை கேரள மாநிலத்தைக் கடந்து போயிருக்கிறது“ என்றார்.
அதற்கு ஆதாரமாக, “சமீபத்தில் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை எதிர்த்து டெல்லியில் நடந்த கண்டனக் கூட்டத்திற்கு வருகை புரிந்த ஃபாசிச பா.ஜ.க. தேசியத் தலைவர் நிதின் கட்காரியை முகம் மலர வரவேற்றார் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியத் தலைவர் சீதாராம் யெச்சூரி” என்கிறார் சென்னிதலா.

0 கருத்துரைகள்:
Post a Comment