புதுடெல்லி : இந்தியர்களை சோதனை எலி போல் மருந்து நிறுவனங்கள் பயன்படுத்துவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்த விவரங்களை தெரிவிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தொண்டு நிறுவனம் ஒன்று தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: மருந்து கம்பெனிகள் புதிதாக தயாரிக்கும் மருந்துகளை விற்பனைக்கு அனுப்பும் முன் தீவிர சோதனை செய்ய வேண்டும்.
முதலில் மிருகங்களிடம் சோதனை நடத்தும் இந்த நிறுவனங்கள் பின்னர் மனிதர்களிடம் சோதனை நடத்துகிறார்கள். இந்த சோதனையின் சாதக பாதகங்களை சம்பந்தப்பட்டவரிடம் விளக்கிய பிறகு அவரது சம்மதத்தின் பெயரில் சோதனையை நடத்த வேண்டும். ஆனால், பல நிறுவனங்கள் இந்தியர்களிடம் மருந்து சோதனை நடத்தும்போது அவர்களது அனுமதியை பெறுவதே இல்லை.
இந்தியர்களை சோதனை எலிகள் போல் இந்த மருந்து நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. மொத்தம் 3,300 இந்தியர்கள் சோதனைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 1,833 பேர் 15 வயதுக்குட்பட்டவர்கள். மேலும் 233 பேர் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள். 15 அரசு டாக்டர்க ளும், 40 தனியார் மருத்துவமனை டாக்டர்களும் இதுபோன்ற சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக அரசு டாக்டர்களுக்கு மட்டும் ரூ.5.5 கோடியை மருந்து கம்பெனிகள் தந்துள்ளன. மருந்து சோதனைகளால் கடந்த 2008 முதல் 2010 வரை 1,522 பேர் பலியாகி உள்ளனர். சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் ஏழைகள். இதனால், இந்தியாவில் மருந்து சோதனைக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, ஏ.ஆர்.தவே ஆகியோர் முன்நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது: இந்தியர்களை சோதனை எலி போல் மருந்து நிறுவனங்கள் பயன்படுத்துவது அதிர்ச்சி அளிக்கிறது. இதற்கு ஒரே உத்தரவில் ஒட்டுமொத்த தடை விதிக்க எங்களால் முடியும். இந்தியாவில் நடக்கும் மருந்து சோதனைகள் பற்றிய விவரத்தை மத்திய, மாநில அரசுகள் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.
அதில், கடந்த 2005 ஜனவரி முதல் கடந்த ஜூன் 30ம் தேதி வரை மருந்து சோதனை நடத்த கொடுக்கப்பட்ட அனுமதி, சோதனையின்போது பலியானவர்கள் எண்ணிக்கை பற்றிய விவரங்கள் அந்த அறிக்கையில் இடம்பெற வேண்டும். சோதனையால் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட பக்க விளைவுகள் பற்றியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தரப்பட்ட இழப்பீடு விவரத்தையும் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.


0 கருத்துரைகள்:
Post a Comment