தமது வான் எல்லையில் பறந்த உளவு விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்துள்ளது இஸ்ரேலிய விமானப்படை. இஸ்ரேலின் தென்பகுதிக்கு மேலாக நேற்று காலை அடையாளம் காணப்படாத இந்த உளவு விமானம் பறந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உளவு விமானம் எங்கிருந்து வந்தது என்று இன்னமும் தெரியவில்லை.
இந்த உளவு விமானம் முதலில் மெடிட்டரேனியன் கடல் பகுதியில் அவதானிக்கப்பட்டது. அதன்பின், இஸ்ரேலின் மேற்குப் பகுதியில் ஹமாஸ் ஆட்சியில் உள்ள காசா பகுதி மேலாக பறந்து, இஸ்ரேலிய வான் எல்லைக்குள் வந்தது. உடனடியாக இஸ்ரேலிய விமானப்படை உஷார் படுத்தப்பட்டு, இரு போர் விமானங்கள் அந்த வான் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
போர் விமானங்கள், இந்த உளவு விமானத்தை தொடர்ந்து பறந்த நிலையில், உளவு விமானம் வெஸ்ட் பேங்க் எல்லைக்கு அருகில் உள்ள வனப் பகுதிக்கு மேலே பறக்க தொடங்கியது. இன்னமும் சிறிது நேரம் பறந்தால், இஸ்ரேலிய எல்லைக்கு வெளியே உளவு விமானம் சென்றுவிடும் என்றிருந்த நிலையில், உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தும்படி, போர் விமானங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
0700 GMT நேரத்தில், உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
சுடப்பட்டு வனப்பகுதிக்குள் வீழ்ந்த உளவு விமானத்தை தேடும் பணியில், இன்று ராணுவ ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேலிய விமானப்படை செய்தி தொடர்பாளர் அவிடல் லெய்போவிச் “உளவு விமானத்தின் பாகங்களை எடுத்து வந்து ஆராய்ந்த பின்னரே, எந்த நாட்டுக்கு சொந்தமான உளவு விமானம் என்று கூறமுடியும்” என்று தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் ராணுவ அதிகாரியுமான மிரி ரெகெவ், இன்று தமது ட்விட்டர் பக்கத்தில், “இது அனேகமாக ஈரானுக்கு சொந்தமான உளவு விமானமாக இருக்கலாம். அதை இயக்கியவர்கள், ஹெஸ்புல்லா அமைப்பினர் என ஊகிக்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
உளவு விமானத்தின் பாகங்கள் எடுக்கப்பட்ட பின், இந்த விவகாரம் பெரிதாக மாறக்கூடும்.


0 கருத்துரைகள்:
Post a Comment