துருக்கி : ஆர்மேனிய நாட்டு கார்கோ விமானம், துருக்கி விமானப்படை போர் விமானங்களால் வானில் இடைமறிக்கப்பட்டு, துருக்கியில் தரையிறக்கப்பட்டுள்ளது. சிரியாவின் இரண்டாவது பெரிய நகரமான அலிபோ நோக்கி இந்த விமானம் சென்று கொண்டிருந்தது. அலிபோவில் தற்போது சிரியா நாட்டு ராணுவத்துக்கும் போராளிகள் அமைப்புக்கும் இடையே கடும் யுத்தம் நடைபெறுகிறது. அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இந்த விமானம் நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்வதாக கூறப்பட்டது.
சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் அசாத்துக்கு எதிராக போராட்டக்காரர்கள் கடந்த 17 மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களை ஒடுக்க அரசு படைகள் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் அப்பாவி பொது மக்களும், போராட்டக்காரர்களும் பலியாகி வருகின்றனர்.
அத்தியாவசிய பொருட்கள் என்ற பெயரில் சிரியாவுக்கு செல்லும் விமானங்களில் ஆயுதங்கள் கடத்தப்படுவதாக அமெரிக்கா எச்சரித்திருந்தது.
ரஷ்யாவில் இருந்து சிரியா சென்ற பயணிகள் விமானம் ஒன்று, கிட்டத்தட்ட இதே பாணியில் துருக்கியில் தரையிறக்கப்பட்ட சில நாட்களில், இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. நேற்று தரையிறக்கப்பட்ட ஆர்மேனிய நாட்டு விமானமும், சிரியா நோக்கியே சென்று கொண்டிருந்தது.
ஆர்மேனிய விமானம் துருக்கி வான் எல்லையில் பறக்க அனுமதி கோரியது. “சில நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டால் அனுமதி வழங்கப்படும்” என்று கூறிய துருக்கி, தமது விமானப்படை போர் விமானங்கள் இரண்டை வானுக்கு அனுப்பியது. ஆர்மேனிய விமானத்தின் இரு பக்கத்திலும் பறந்த போர் விமானங்கள், ஆர்மேனிய விமானத்தை அங்காரா விமான நிலையத்தில் லேன்ட் செய்யும்படி உத்தரவிட்டன.
தற்போது, அங்காரா விமான நிலையத்தில் வைத்து, ஆர்மேனிய விமானத்தில் ஏற்றப்பட்டுள்ள சரக்குகள் சோதனையிடப்படுகின்றன. அவற்றில் ராணுவ சப்ளை ஏதும் இல்லாவிட்டால், தொடர்ந்து பறக்க அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


0 கருத்துரைகள்:
Post a Comment