Monday, October 8, 2012

இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் குழந்தைகள் படுகாயம் !


ரஃபா: கடந்த ஞாயிற்றுக்கிழமை (07/10/2012) மத்தியானம் காஸாவின் ரஃபா பகுதியில்  இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப்படை திடீர் விமானத் தாக்குதலொன்றை மேற்கொண்டுள்ளது. 

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு விமானப்படையின் இத்தாக்குதலில் ஐந்து குழந்தைகள் உட்பட பத்துப் பலஸ்தீனர்கள் படுகாயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த டாக்டர் அஷ்ரஃப் அல் குத்ரா,  "காயமடைந்துள்ள குழந்தைகளில் ஒரு கைக்குழந்தையும் அடங்கும். மூன்று குழந்தைகளின் உடல்நிலை மிகுந்த கவலைக்குரியதாய் உள்ளது. ஏனைய இருவரும் படிப்படியாகத் தேறிவருகின்றனர்" என்று குறிப்பிட்டுள்ளார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில், "மக்கள் நிறைந்திருந்த ஒரு பிரதேசத்தைக் குறிவைத்தே மேற்படி ஆக்கிரமிப்புத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக, மாலைநேரப் பள்ளிக்கூடம்விட்டுக் குழந்தைகள் வீடுதிரும்பும் நேரமாக இருந்ததாலேயே குழந்தைகள் இத்தாக்குதலில் படுகாயமடைந்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை பலஸ்தீன் பிரதேசங்களில் விமானத் தாக்குதல்கள் உள்ளிட்ட திடீர் தாக்குதல்களை அடிக்கடி மேற்கொள்வதால், பலஸ்தீன் மக்களின் அன்றாட சுமுக வாழ்வு பெரிதும் கேள்விக்குறியாகி வருகின்றது. 'இதுகுறித்து சர்வதேச சமூகம் தொடர்ந்தும் மயான அமைதி காத்துவருவது மனித விழுமியங்களுக்கு அப்பாற்பட்டதாகும்' என்ற வன்மையான குற்றச்சாட்டைப் பலஸ்தீன் மக்கள் அமைப்புக்கள் முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza