Wednesday, October 17, 2012

சேது சமுத்திர திட்டம் தேவையில்லையா? – திமுக தலைவர் கருணாநிதி கண்டனம்

karunanidhi
சென்னை: பல கோடிகள் செலவு செய்து தமிழத்திற்கு நல்ல எதிர்காலமாக திகழும் என்று தமிழக மக்கள் நினைத்து இருந்த சேது சமுத்திர திட்டத்தை தமிழக அரசு கைவிடும் முடிவிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. இது தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் இழைக்கும் மாபெரும்  துரோகம் என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், சேது சமுத்திர திட்டமே தேவையில்லை என்று அதிமுக உச்ச நீதிமன்றத்தில் எழுத்துப் பூர்வமாக  தெரிவித்திருக்கின்றது. ஒரு மாநில அரசிலே இருப்போர், அந்த மாநிலத்திலே புதிய புதிய  திட்டங்கள் வர வேண்டும், மாநில மக்கள் அதன் மூலம் நலம் பெற வேண்டும் என்று  தான் நினைப்பார்கள், அதற்காகத்தான் பாடுபடுவார்கள்.

சேது சமுத்திரத் திட்டம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, அந்தத் திட்டம் வந்து,  அதனால் மற்றக் கட்சிகளுக்குப் பெயர் வந்து விடக் கூடாது என்று அதிமுக எண்ணுகிறது.  அதிலும் தொழில் வளர்ச்சியில் பின் தங்கிய நிலையிலே உள்ள தென்மாவட்டங்களில்  உள்ள மக்களுக்கு நல்ல வாழ்வாதாரத்தையும்,
சமூகப் பொருளாதாரத்தையும் தேடித்  தரும் என்ற எண்ணத்தோடுதான் அறிஞர் அண்ணா காலத்திலிருந்து 150 ஆண்டுகளுக்கு  மேலாக தமிழர்களின் கனவாக இருந்து வந்த திட்டத்தை ஒரேயடியாக மூடுவதற்கான முயற்சியிலே அதிமுக அரசு ஈடுபட்டுள்ளது.
கடந்த 150 ஆண்டுகளாக திட்டமிடப்பட்டு பல அறிஞர்களும், சான்றோர்களும், விஞ்ஞானிகளும் பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு முடிவுக்கு வந்து, மத்திய அரசும்  விரிவான பரிசீலனை செய்து, பல கோடி ரூபாய் அதற்காக ஒதுக்கி செலவிட்ட பிறகு, ஒரே நாள் ஆராய்ச்சியில், உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பது தமிழகத்திற்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகம்” என்று கூறியுள்ளார்.
தொடர் மின்வெட்டு, விலைவாசி ஏற்றம், மர்ம கொசுக்களின் அதிகரிப்பால் டெங்கு போன்ற கொடிய நோய்கள், கர்நாடகவிலிருந்து வரவேண்டிய தண்ணீர் வராததால் விவசாயிகள் வாடும் நிலை என பல்வேறு சிக்கல்கள் தொடர்ச்சியாக தமிழக மக்களை பாதிக்கும் சூழ்நிலையில் அதற்கு வழி காண்பதை பற்றி சிந்திக்க வேண்டிய தமிழக அரசு நல்ல திட்டத்தை முடக்குவதற்கு முனைப்பு காட்டுவது தமிழக மக்களிடையே பெறும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza