Thursday, October 11, 2012

ராமநாதபுரம் அஞ்சல் அலுவலகங்களில் சோலார் விளக்குகள் விற்பனை!


ராமநாதபுரம், அக்.10: கீழே விழுந்தால் உடையாததும், மின்சாரத்தை சேமிக்க கூடிய வகையிலுமான சோலார் விளக்குகள் அஞ்சல் அலுவலகங்களில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாகராமநாதபுரம் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் சோமன் புதன்கிழமை தெரிவித்தார்.
இந்திய தபால்துறை சார்பில் நடந்து வரும் அஞ்சல் வார விழாவை முன்னிட்டு புதிதாக விற்பனைக்கு வந்துள்ள சோலார் விளக்குகள் குறித்து அவர் மேலும் கூறியதாவது:
மின்பற்றாக்குறையால் மக்கள் அவதிப்படும் நிலையில் தொடர்ந்து 8 மணி நேரம் எரியக்கூடிய சோலார் விளக்குகள் அஞ்சல் அலுவலகங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.



சூரிய ஒளியை பெற்றுக் கொண்டு தொடர்ந்து 8 மணி நேரம் ஒளி தரக் கூடியது. மிகக்குறைந்த விலைக்கு இரு வகையான விளக்குகள் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு வகை ரூ.549க்கு விற்பனையாகும் வகையில் வெளிச்சத்தை கூட்டவும், குறைக்கவும் முடியும். மற்றொரு வகையான ரூ.1699க்கு விற்பனையாகும் வகையில் வெளிச்சத்தை 4 அடுக்குகளில் கூட்டவும், குறைக்கவும் முடியும். வாங்கும் பொருளுக்கு முறையாக ரசீது கொடுக்கப்படுவதுடன் அதற்குரிய உத்தரவாத கார்டும் வழங்குகிறோம். மின்சாரம் இல்லாத நேரங்களில் செல்போன்களையும் இவ்விளக்குகள் மூலம் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.



ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி, பரமக்குடி, ராமநாதபுரம், திருவாடானை, தங்கச்சி மடம், மண்டபம், ராமேசுவரம் உள்ளிட்ட அஞ்சல் அலுவலகங்களில் தற்போது விற்பனை செய்யப் படுகிறது.
 அறிமுகம் செய்யப்பட்ட ஒரு மாதத்தில் மட்டும் இதன் மகத்துவத்தை உணர்ந்து 300 விளக்குகள் விற்பனையாகியுள்ளன. கிராமப்புற மக்கள் அதிகமாக விரும்பி வாங்குகின்றனர்.



படிப்படியாக கிராமப்புற அஞ்சலகங்களிலும் இதனை விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்க நாட்டின் தொழில்நுட்பத்துடன் தரமாக தயாரிக்கப்பட்டிருப்பதும் இதன் சிறப்புகளில் ஒன்றாகும். 



காசு 7 சதவிகித தள்ளுபடியில் விற்கப்படுகிறது. வெளிநாட்டுப் பணப்பரிவர்த்தனையில் ராமநாதபுரம் தலைமை அஞ்சல அலுவலகம் இந்தியாவில் 2வது இடத்தைப் பிடித்துள்ளது. இம்மாதம் அக்டோபர் 9 முதல் 15 ஆம் தேதி வரை அஞ்சல்வார விழா என்பதால் இவ்வாரத்தில் ஒவ்வொரு நாளையும் ஒரு தினமாக கொண்டாடி வருகிறோம். பள்ளிக் குழந்தைகளுக்கு அஞ்சல் துறை மூலமாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளையும் வழங்க முடிவு செய்திருப்பதாகவும் கண்காணிப்பாளர் சோமன் தெரிவித்தார்.
 பேட்டியின் போது உதவி கண்காணிப்பாளர் முருகன்,விற்பனைப்பிரிவு மேலாளர்கள் சீத்தாராமன், பாலு ஆகியோரும் உடன் இருந்தனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza