மாஸ்கோவில் இருந்து சிரியா நோக்கி பறந்து கொண்டிருந்த பயணிகள் விமானம் ஒன்றை வானில் இடைமறித்த துருக்கியின் போர் விமானங்கள், பயணிகள் விமானத்தை, அங்காரா விமான நிலையத்தில் போர்ஸ் லேன்டிங் செய்ய வைத்துள்ளன. நேற்று (புதன்கிழமை) மாலை இந்த சம்பவம் நடைபெற்றதாக துருக்கி அரசு தொலைக்காட்சி இன்று அதிகாலை அறிவித்தது.
மாஸ்கோவில் இருந்து கிளம்பிய விமானம் வானில் பறந்துகொண்டிருந்தபோது, அந்த விமானத்தின் கார்கோ பகுதியில் ஆயுதங்கள் உள்ளதாக தகவல் கிடைத்தது. அதையடுத்து, துருக்கி விமானப் படைக்கு சொந்தமான இரு F-16 போர் விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
அவை, பயணிகள் விமானத்துக்கு இருபுறமும் பறந்தபடி, பயணிகள் விமானத்தின் பைலட்டை தொடர்புகொண்டு, விமானத்தை துருக்கி நோக்கி திசை திருப்புமாறு கூறின. தமது உத்தரவுக்கு கீழ்ப்படியாவிட்டால், பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்படும் என துருக்கி போர் விமானத்தில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அதையடுத்து, வேறு வழியில்லாமல் துருக்கி நோக்கி திசை திரும்பிய பயணிகள் விமானம், அங்காரா விமான நிலையத்தில் லேன்ட் செய்தது.
சிரியாவுக்குஆயுதங்கள் விற்க சர்வதேச தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தடையை மீறி ரஷ்யா தமது ஆயுதங்களை சிரியாவுக்கு வழங்குவதாக தகவல்கள் உள்ளன. அதை ரஷ்யா மறுத்துள்ளது.
கார்கோ விமானங்களில ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்பட்டால், அவை வெளிப்படையாக தெரியவந்துவிடும் என கருதி, மாஸ்கோவில் இருந்து சிரியா செல்லும் பயணிகள் விமானங்களின் கார்கோ பகுதியில் ஆயுதங்கள் ஏற்றப்பட்டிருக்கலாம் என்பதே துருக்கிக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம். இது தொடர்பாக அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ., துருக்கி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்திருக்கலாம் என உளவு வட்டாரங்களில் கூறப்படுகிறது.
துருக்கி சிவில் விமானப் போக்குவரத்து டைரக்டர் ஜெனரல் பிலால் எக்சி, “குறிப்பிட்ட பயணிகள் விமானத்தில் 212 பேர் பயணம் செய்ய முடியும் என்றபோதிலும், விமானப் பணியாட்கள் உட்பட 37 பேர் மட்டுமே உள்ளனர். விமானத்தில் அதிக எடை கார்கோ எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்றால், பயணிகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவது வழமையான ஒன்றுதான்” என்று தெரிவித்துள்ளார்.
விமானம் தற்போது அங்காரா விமான நிலையத்தின் அதி பாதுகாப்பு ஏரியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று விமானத்தின் கார்கோ பகுதிகள் சோதனையிடப்படும் என துருக்கி பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது


0 கருத்துரைகள்:
Post a Comment