Thursday, October 18, 2012

ஃபலஸ்தீனில் கடந்த இரு வாரங்களில் இருபது குழந்தைகள் கடத்தல் !


ரமல்லா: கடந்த இரு வாரங்களுக்குள் மட்டும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை, ஜெரூசலம், காஸா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இருபது பலஸ்தீன் குழந்தைகள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.

ரமல்லாவிலுள்ள "சிறுவர் தகவல் துறை" வெளியிட்டுள்ள அறிக்கையில்,  "மேற்குக்கரை, காஸா பிராந்தியங்களில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப்படை தொடர்ந்தும் போர்க் குற்றங்களை இழைத்துவருகின்றது. பலஸ்தீன் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைப் பிரயோகம், ஆள்கடத்தல் நடவடிக்கைகளில் ஆக்கிரமிப்புப் படை இடையறாது ஈடுபட்டுவருகின்றது. இம்மாத ஆரம்பத்தில் இருந்து இதுவரை சுமார் 20 பலஸ்தீன் குழந்தைகளை ஆக்கிரமிப்பு இராணுவம் கடத்திச் சென்று தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்துள்ளது. இது மிகத் தெளிவான மனித உரிமை மீறலாகும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும், "சிறுவர்கள் உள்ளிட்டு பலஸ்தீன் பொதுமக்கள் மீது சட்டவிரோத யூதக் குடியேற்றவாசிகளால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் அத்துமீறிய வன்முறைத் தாக்குதல்கள், ஒக்டோபர் மாதம் முதல் காஸா மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் போர்விமானத் தாக்குதல்கள் என்பவற்றால் பலஸ்தீன் மக்களின் அன்றாட சுமுக வாழ்வு பெரிதும் சீர்குலைந்துவருகின்றது. நிராயுதபாணிகளான பலஸ்தீனர்கள் உயிர் அச்சுறுத்தலோடு தமது நாட்களைக் கழிக்கின்றனர். குறிப்பாக, பலஸ்தீன் குழந்தைகள் உடல் மற்றும் உளவியல் ரீதியாகப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

போர் நெருக்கடி நிலைக்கமைய பள்ளிக்கூடங்கள் கால வரையறையின்றி மூடப்பட்டுள்ளதால் பலஸ்தீன் சிறுவர்களின் கல்வி பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. சர்வதேச சட்ட விழுமியங்களுக்கு எதிரான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கத்தின் எதேச்சதிகார நடவடிக்கைகளைத் தடுத்துநிறுத்த சர்வதேச சமூகம் துரித நடவடிக்கை மேற்கொள்ளமுன்வர வேண்டும்" என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza