கெய்ரோ:எகிப்து உளவுத்துறை தலைவர் முராத் முவாஃபியிடம் பதவி விலகுமாறு அதிபர் முர்ஸி உத்தரவிட்டுள்ளார்.
ஸினாயில் ராணுவத்தினருக்கு எதிராக மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் 16 எகிப்திய வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. புதிய உளவுத்துறை தலைவராக முஹம்மது ரஃபாத் அப்துல் வாஹிதை முர்ஸி நியமித்துள்ளார்.
அத்துடன் ராணுவ போலீசுக்கு புதிய தலைவரை நியமிக்க பாதுகாப்பு அமைச்சருக்கு முர்ஸி உத்தரவிட்டுள்ளார். ஹம்தி பதீன் என்பவர் தற்பொழுது ராணுவ போலீசுக்கு தலைவராக உள்ளார். அதிபரின் செய்தி தொடர்பாளர் யாஸிர் அலி தொலைக்காட்சி மூலமாக இத்தகவல்களை அறிவித்தார்.
ஆனால்,முக்கிய ராணுவ அதிகாரிகளின் பதவி பறிப்பிற்கு ஸினாய் தாக்குதலின் பின்னணியா? என்பது குறித்து யாஸிர் அலி தெரிவிக்கவில்லை.
ஸினாய் தாக்குதலைத் தொடர்ந்து முராத் முவாஃபி அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார். எகிப்தில் உளவுத்துறை தலைவர்கள் பகிரங்கமாக அறிக்கை வெளியிடுவது வழக்கமல்ல. உளவுத்துறை ஏற்கனவே தகவல் அளித்துவிட்டதாகவும், அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து எச்சரித்ததாகவும் முவாஃபி தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். மேலும் தகவல்களை சேகரிப்பது மட்டுமே தனது பணி என்றும் அவர் கூறியிருந்தார்.
மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து எகிப்து-காஸ்ஸா எல்லையில் உள்ள ஸினாய் பகுதியில் ராணுவம் கடுமையான தாக்குதலை நடத்தியது. விமானத்தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment