Wednesday, August 8, 2012

பத்ர் தரும் பாடம்!

பத்ர் தரும் பாடம்!
மனித குலத்திற்கு நேர்வழி காட்டும் புனித திருக்குர்ஆனை(2:185) இறக்கியருள அகிலங்களை படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாதம் தான் ரமலான்.
மனித சமூக வாழ்வின் துவக்கம் முதல் இறுதி வரை மாபெரும் மாற்றத்தை  எக்காலத்திலும் உருவாக்கிக் கொண்டிருக்கும் புரட்சி வேதம்தான் திருக்குர்ஆன். மனித சமூகத்திற்கு ஓர் பூரணமான விடுதலையை திருக்குர்ஆன் லட்சியமாக கொண்டுள்ளது. சாத்தானிய சக்திகளிடமிருந்து விடுதலை, ஏகாதிபத்திய சர்வாதிகாரிகளின் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை, மனோ இச்சையில் இருந்து விடுதலை, உலகியல் வாழ்வின் அதி மோகத்தில் இருந்து விடுதலை ஆன்மீகத்தின் அபத்தமான பயணத்தில்  இருந்து விடுதலை மரணத்திற்கு பிந்தைய வாழ்வில் நரகில் இருந்து விடுதலை – இவ்வாறு திருக்குர்ஆன் சமர்ப்பிக்கும் விடுதலை கொள்கை உலகியல் மற்றும் மரணத்திற்கு பிந்தைய வாழ்வின் வெற்றிக்கு அடித்தளமாகும்.

திருக்குர்ஆன் அறிவுப்பூர்வமாக புரட்சியை சாதிக்கிறது. மனிதனை கட்டுப்படுத்துவது உள்ளம். உள்ளம் நோய்வாய்ப்பட்டால் அவனது சிந்தனைகள் சிதிலமடைகின்றன. செயல்கள் திசை திரும்புகின்றன. எங்கு செல்கிறோம் என்பதை தெரியாமல் மனிதன் தடுமாறத் துவங்குகிறான். நோயற்ற உள்ளம் ஆன்மீக புத்துணர்ச்சியை பெறுகிறது. உடல்ரீதியான உற்சாகத்தையும், நற்செயல்கள் புரிவதில் ஆர்வத்தையும் உருவாக்குகிறது. மனிதனுக்கு துணிவையும், திட உறுதியையும் தருகிறது. மனிதன் தனது லட்சியத்தை அடைவதற்கான செயல்வீரனாக மாற்றுகிறது. மனித உள்ளத்தை நோயற்றதாகவும், குறைகளற்ற பரிபூரணமாக்கவும் திருக்குர்ஆன் ஒரு திட்டத்தை சமர்ப்பிக்கிறது. இத்திட்டம் பரிசுத்தமான ஓர் சித்தாந்தத்தை மையமாக கொண்டதாகும். வணக்க வழிபாடுகள் மூலம் அதற்கான தீவிர பயிற்சியை அளிக்கிறது. அன்றாடம் ஐந்து நேரம் மேற்கொள்ளும் தொழுகை இத்திட்டத்தின் முக்கிய பகுதியாகும். ஒரு மாதம் நீளும் நோன்பு இத்திட்டத்தின் வருடாந்திர பயிற்சியாகும். மனித சமூகத்தின் விடுதலைக்காக தீவிர பயிற்சியை அளிக்கப்படும் ரமலான் ஏராளமான மாபெரும் சம்பவங்களின் சாட்சியாகும்.
பரிசுத்த திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்டது தான் ரமலானின் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு. திருக்குர்ஆன் கூறும் புரட்சிகர கொள்கையை செயல்ரீதியாக மாற்றுவதற்கான திறன் படைத்த குழுவினரை நோன்பு என்ற வழிபாட்டின் மூலம் வார்த்தெடுக்கப்படுகின்றார்கள். திருக்குர்ஆன் அருளப்பட்டதன் வருடாந்திர நிகழ்வை நாம் இவ்வாறு கொண்டாட பணிக்கப்பட்டுள்ளோம். இவ்வாறு வார்த்தெடுக்கப்பட்ட குழுவினரரால் சரித்திரத்தின் பக்கங்களில் பொன்னெழுத்துக்களால் பதிவுச் செய்யபட்ட விடுதலை போராட்ட வரலாற்றின் ஊடே நாம் பயணிப்போம்.
பத்ர் எனும் மாபெரும் நிகழ்வு!
மனித சமூகத்தை அறியாமை எனும் இருளில் இருந்து நேர்வழி என்ற வெளிச்சத்தை நோக்கி அழைத்துச் செல்ல நியமிக்கப்பட்ட இறைவனின் இறுதித் தூதரான முஹம்மது நபி(ஸல்…) அவர்கள் பயணித்த பாதை மலர்களால் தூவப்பட்டதல்ல. மாறாக, கற்களும், முட்களும் நிறைந்த கடினமான பாதையாகும்.
உறவினர்கள் வெறுத்தார்கள். ஆதரித்தவர்கள் அகன்றார்கள். நேசித்தவர்கள் பகைத்தார்கள். புகழ்ந்தவர்கள் இகழ்ந்தார்கள். தாங்க முடியாத மனோரீதியான கொடுமைகள் உடல்ரீதியான சித்திரவதைகளாக பரிணாமம் பெற்றன. 3 வருடங்கள் கடுமையான சித்திரவதைகள். ஓர் ஆறுதல் செய்தியை கேட்க தட்டிய கதவுகள் எல்லாம் திறக்கப்படவில்லை. விடுதலையை பெற்றுத்தர வந்தவரை கல்லெறியும் கொடூரம் உள்ளங்கொண்டவர்கள் அடிமைத்தனத்தை ஆராதித்தார்கள்.
அறியாமையின் உச்சத்திலும் அகங்காரத்திலும் தன்னிலை மறந்த அந்த மக்களால் கல்லெடிக்கும், சொல்லடிக்கும் ஆளான நபிகளாரிடம் வானவர் ஜிப்ரயீலுடன் வருகைத் தந்த மலக்குல் ஜிபால், ‘நீங்கள் விரும்பினால் இவர்களை இரு மலைகளையும் கொண்டு நசுக்கி விடுகிறேன்’ என கூறியபொழுது, அம்மாமனிதர், “அதை ஒருக்காலும் நான் விரும்ப மாட்டேன். மாறாக, அவர்களிலிருந்து அல்லாஹ்வை மட்டும் வணங்கி அவனுக்கு இணை வைக்காதவர்களை அவன் உருவாக்குவான் என்று நான் ஆதரவு வைக்கிறேன்” எனக் கூறினார்கள்.
13 ஆண்டுகளாக சித்திரவதைகளையும், துயரங்களையும் சந்தித்தார்கள் நபி(ஸல்…) அவர்களும், அவர்களது தோழர்களும். இறுதியில் அந்த காரிருளின் ஆராதனையாளர்கள் சத்தியத்தின் பேரொளியை அணைத்துவிட நாடினார்கள். கொலைகாரர்களை பழிவாங்க சாதிக்காத விதம் சதித்திட்டம் தீட்டி நபிகளாரை கொலைச் செய்ய பாதகர்கள் முயன்றபொழுது அல்லாஹ்வின் பாதுகாப்பில் நபிகளார் தனது சொந்த ஊரை விட்டு பிரியா விடைபெற்று மதீனாவிற்கு சென்றார்கள்.
பிறந்த இடத்தில் சத்தியத்திற்கு கிடைத்த எதிர்ப்பலைகள் வாழ்விடம் தேடிச்சென்ற பூமியிலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அல்லாஹ்வின் ஆணைப்படி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள் நபிகளார். அநியாயத்துக்கு ஆளாகிய பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக அல்லாஹ் போருக்கான அனுமதியை வழங்கினான். (பார்க்க அல்குர்ஆன் 22.39,40)
மக்காவாசிகளின் ஒரு வர்த்தக குழு ஷாமில் இருந்து திரும்பி வரும் தகவல் நபி(ஸல்)அவர்களுக்கு கிடைத்தது. வர்த்தக குழுவை தாக்கினால் தாங்கள் இழந்த செல்வத்தின் ஒரு பகுதியை மீட்கலாம் என முஸ்லிம்கள் விரும்பினார்கள். வர்த்தக குழுவின் தலைவர் அபூ சுஃப்யான் முஸ்லிம்கள் தமது குழுவை தாக்க வருகின்றார்கள் என்பதை உணர்ந்தார். வர்த்தக குழுவை மாற்று வழியில் செலுத்தினார். தங்களை முஸ்லிம்களின் குழு தாக்க வருவதாகவும், பாதுகாப்பிற்கு ஒரு படையை அனுப்பவேண்டும் என்றும் தகவலை அனுப்பினார்.
அபூஜஹ்லின் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கத்து முஷ்ரிக்குகள் அனைத்து வித தயாரிப்புகளுடன் ஆயுதங்களை ஏந்தியவாறு முஸ்லிம்களை சந்திக்க புறப்பட்டனர். அவர்கள் பத்ரை அடைந்த பொழுது வர்த்தக குழு பாதுகாப்பாக திரும்பிச் சென்றதை அறிந்தார்கள். திரும்பிச் செல்வோம் என பலரும் கருத்து தெரிவித்தனர். ஆனால், தலைவரான அபூஜஹ்ல் முஸ்லிம்களை ஒரு பாடம் படிக்கவைத்தே திரும்பவேண்டும் என அடம்பிடித்தான். ஆக, முஸ்லிம்களை எதிர்கொள்ள முஷ்ரிக்குகளின் படைகள் தயாராகின. வர்த்தக குழு மாற்று வழியில் சென்றதை அறியாத முஸ்லிம்கள் நம்பிக்கையுடன் முன்னேறிய பொழுது மக்கா முஷ்ரிக்குகள் படை திரண்டு வந்திருக்கும் தகவலை அறிந்தார்கள்.
நபி(ஸல்…) அவர்களுடன் 313 பேர் மட்டுமே இருந்தார்கள். பலரிடம் வாகனங்கள் இல்லை. சிலரிடம் ஆயுதம் இல்லை. இருந்த ஆயுதமோ வெறும் வாள் மட்டுமே. ஒரு சிலரிடம் அம்பும், வில்லும் இருந்தன. இத்தகையதொரு பலகீனமான குழு  பலம் வாய்ந்த குஃபார்களின் படையை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை ஆராய நபி(ஸல்..) அவர்கள் ஷூராவை கூட்டினார்கள். அன்ஸாரி பிரமுகர்களும், முஹாஜிர் பிரமுகர்களும் எதிரிகளுடன் மோதிட தயார் என உறுதிப்பூண்டார்கள்.
இரு படைகளைச் சார்ந்த இருவர் நேருக்கு நேர் மோதலில் துவங்கிய போரில் தீப்பொறி பறந்தது. போர் சூடுபிடித்தது. அல்லாஹ் வானவர்களை இறக்கி முஸ்லிம்களின் படைக்கு உதவினான். எதிரிகளின் தரப்பில் 70 பேர் கொல்லப்பட்டனர். 70 பேர் கைது செய்யப்பட்டனர். 14 முஸ்லிம்கள் ஷஹீதானார்கள். இறுதியில் முஸ்லிம் படை எதிரிகளின் படையை தோற்கடித்து வெற்றிக் கொடியை நாட்டியது. இது பத்ரைக் குறித்த சுருக்கமான வர்ணணையாகும்.
ஹிஜ்ரி 2-ஆம் ஆண்டு ரமலான் மாதம் 17-ஆம் தேதி பத்ருப்போர் நிகழ்ந்தது. சத்தியத்தை நிலைநாட்டவும், அநீதத்திற்கு எதிராகவும் போராடும் லட்சிய வீரர்களுக்கு தேவையான பாடங்களை நாம் பத்ரில் இருந்து பெறலாம். ராணுவத்தினரின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் வரலாற்றில் ஒரு மைல் கல்லாய் இந்த மாபெரும் சம்பவம் நினைவு கூறப்படுகிறது.
மக்காவில் 15 வருடங்களுக்கு முன்பு துவங்கிய கொடுமைகளுக்கு முடிவுக்கட்டி முஃமின்களுக்கு விடுதலையையும், கண்ணியத்தையும், பாதுகாப்பு உணர்வையும், தன்னம்பிக்கையையும் பெற்று தந்த போர்தாம் பத்ர்.
அல்லாஹ்வின் பூமியில் அவனது அடியார்கள் ஒடுக்கப்பட்டவர்களாகவும், அவமானத்தை சுமந்தவர்களாகவும், சாத்தானிய சக்திகள் அவர்களை அடக்கி ஒடுக்குபவர்களாகவும் திகழ்வது, சத்தியம் மறுக்கப்படுவது, அசத்தியம் கோலோச்சுவது -இத்தகைய இயற்கைக்கு முரணான போக்குகளுகளில் இருந்து மனித சமூகதை விடுவித்த விடுதலைப் போராட்டம் தான் பத்ர்.
பத்ருக்கு பிறகு மதீனா ஒரு அகதி முகாமாக திகழவில்லை. உன்னத முன்மாதிரிகளை கொண்ட ஒரு சிறிய தேசமாக மதீனாவை தலைமையிடமாக கொண்ட இஸ்லாமிய நாடு அங்கீகரிக்கப்பட்டது. முஸ்லிம்கள் ஓர் அடக்கி ஒடுக்கப்படும், கொடுமைகளுக்கு ஆட்படுத்தப்படும், பலகீனமான சமூகம் என்ற எண்ணம் வரலாற்றில் திருத்தி எழுதப்பட்டது.
எண்ணிக்கையில் குறைவாக இருந்த பொழுதும் எந்த பெரும் சக்திகளையும் வெல்லும் துணிவுக் கொண்ட தன்னம்பிக்கை மிக்க சமூகமாக அவர்கள் அங்கீகரிக்கப்பட்டார்கள். ஹிஜ்ரி 2-ஆம் ஆண்டு ரமலான் மாதத்தில் பத்ரில் துவங்கிய விடுதலையின் பயணம் ரோம, பாரசீக பேரரசுகளின் அடக்கு முறை ஆட்சியாளர்களிடமிருந்து ஒடுக்கப்பட்ட மக்களை மீட்கும் சுதந்திரப் போராட்டமாக வளர்ந்ததற்கு வரலாறு சாட்சியம் பகருகிறது.
சிறிய கூட்டமொன்று பெரும் கூட்டத்தை வென்ற பத்ரின் சரித்திரத்தில் நம்மில் பலர் ஆச்சரியம் அடைகின்றோமே தவிர அந்த பத்ரிலிருந்தும் அதற்கு முந்தைய 15 வருடங்களில் நபி(ஸல்…) அவர்களும், அவர்களுடைய தோழர்களும் பட்ட கஷ்டங்களையும், தியாகங்களையும், நபி(ஸல்…) அவர்கள் கட்டியெழுப்பிய உன்னதமான சமூகத்தைப் பற்றியும் படிப்பினை பெற தவறிவிடுகிறோம்.
பத்ருப்போர் முஸ்லிம்களுக்கு அல்லாஹ்வால் அளிக்கப்பட்ட மாபெரும் வெற்றி என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அதற்கு முந்தைய 15 ஆண்டுகளில் ஏன் முஸ்லிம்களுக்கு இந்த உதவியை அல்லாஹ் வழங்கவில்லை? என்ற கேள்வி நமது உள்ளத்தில் எழலாம். பத்ரு களத்தில் வைத்துதான் இஸ்லாத்தின் எதிரிகளை நிர்முலாக்க முடியும் என்பதல்ல. அல்லாஹ் மாபெரும் ஆற்றல் பெற்றவன். இந்த பிரபஞ்சத்தையும் அதில் உள்ள படைப்பினங்களையும் படைத்து பாதுகாத்து பரிபாலித்து வருபவன். அவன் நாடினால் ‘குன்’ என்ற கட்டளையிட்டாலே போதும் எல்லாமே அழிந்துவிடும். அத்தகைய ஆற்றல் பெற்ற இறைவன் 15 ஆண்டுகள் முஸ்லிம்களை பல்வேறு இன்னல்களை அனுபவிக்க வைத்துவிட்டு பத்ரு களத்தில் வைத்து வெற்றியை அருளினான்?
இவையெல்லாம் அல்லாஹ்வின் திட்டப்படி நடந்தவையாகும்.
அல்லாஹ்வுக்கு திட்டம் வகுத்து செயல்படுவது அவசியமில்லை. ஆனாலும் அல்லாஹ் ஒரு திட்டத்தினூடேயே செயலாற்றுகின்றான்.
வானங்களையும், பூமியை படைத்திருப்பதும், மனிதனை படைத்து அவனை வழிநடத்துவதும் அழகிய திட்டத்தினூடாகவேயாகும். அத்திட்டத்தின் ஓர் கட்டமே பத்ர் ஆகும். பத்ர் ஓர் அதிசயம் அல்ல. ஆனால் நிதர்சனமாகும். இன்று வரை உலகம் ஆச்சரியப்படும் ஒரு மகத்தான திட்டத்தின் வெற்றியே பத்ர் ஆகும்.
வெற்றிகள் வானத்திலிருந்து வருவதில்லை. ஆனால் அவை வரவழைக்கப்படாலம். ஆகவே பத்ரு போரின் வெற்றி தானாக வந்துவிடவில்லை. பத்ரு போரின் ‘குன்’ ஆகட்டும் என்ற வார்த்தையினால் வந்தது அல்ல. அது அந்த வார்த்தைக்கு சொந்தக்காரனான அல்லாஹ்வால் வழிநடத்தப்பட்ட ஓர் அழகிய திட்டம்.
சூலிருந்து 10 மாதம் கருவாக இருந்து ஒட்டகையாக வெளிப்படுவது அல்லாஹ்வின் அழகிய திட்டம். கற்பாறைக்குள்ளிருந்து ஸாலிஹ் நபியின்(அலை…) ஒட்டகம் வெளிப்படுவது அதிசயம்.
பத்ரை அற்புதமாக பார்ப்பவர்கள் அதிசயித்துவிட்டு போவார்கள். அழகிய திட்டமாக பார்ப்பவர்கள் அதனை செயல்படுத்த முனைவார்கள்.
பத்ரு பனீ இஸ்ரவேலர்களுக்கு வானத்தில் அளிக்கப்பட்ட மன்னுஸல்வா போன்றதல்ல. பதினைந்து வருடங்களாக அல்லாஹ்வின் தூதரும், அவர்களுடைய உற்ற தோழர்களும் ஓயாது உழைத்துப் பெற்ற கூலியாகும். நாமும் உழைத்தால் அதற்கான கூலியை பெறமுடியும் இன்ஷா அல்லாஹ்.
அ.செய்யதுஅலீ

Thanks to: WWW.THOOTHU ONLINE.COM

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza