புதுடெல்லி:இந்த ஆண்டின் சுதந்திர தின உரையை நாட்டின் உச்ச பதவியில் இருப்பவர்கள் தாக்குதல் உரையாகவே மாற்றிவிட்டார்களோ என எண்ணத் தோன்றுகிறது. ஏற்கனவே குடியரசு தலைவர் தனது உரையில் ஹஸாரே குழுவினரின் போராட்டம் குறித்து ஒரு பிடி பிடித்திருந்தார். இந்நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நேற்று(புதன்கிழமை) தனது சுதந்திர தின உரையில் மத்திய அரசை தாக்கியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) சுதந்திர தினக் கொடியேற்றி வைத்து அவர் கூறியது:
நீதிபதிகளின் பொறுப்புகளை வலியுறுத்தம் வகையில் அரசு சட்டம் இயற்றலாம். அதைக் கண்டு எங்களுக்கு பயம் இல்லை. ஆனால் அது நீதித்துறையின் சுதந்திரத்தை ஒடுக்கும் விதமாக இருத்தல் கூடாது.
‘நீதித்துறை பொறுப்புணர்வு மசோதா’ சட்டமாக்கப்படுவதற்கு முன் பல்வேறு சட்ட வல்லுநர்களின் ஆலோசனைகளை கண்டிப்பாக அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். மேலும் பல்வேறு நாடுகளில் நீதித்துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
நீதித்துறை குறித்து எந்த சட்டம் இயற்றுவதாக இருந்தாலும் சட்ட நிபுணர்களின் ஆலோசனைகளைக் கேட்க வேண்டும் என்று சட்ட அமைச்சருக்கு வேண்டுகோள் விடுப்பதாக அவர் கேட்டுக் கொண்டார். சில நேரங்களில் அக்கறை காரணமாக நாடாளுமன்றம் மற்றும் அரசுத் துறைகளுக்கு எதிராகத் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன.
நாடாளுமன்றம் மற்றும் அரசுத் துறைகள் ஆகிய ஒவ்வொன்றுக்கும் தனித்தனி அதிகாரங்கள் உண்டு. அவற்றின் கண்ணியத்தையும் நீதித்துறை கருத்தில் கொள்ள வேண்டும். அதனால் தீர்ப்பு எழுதும்போது நீதிபதிகள் கவனமாக இருக்க வேண்டும்.
அரசியல் சட்டப் பிரிவுகள் குறித்து நாம் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும். அது குறித்த புரிதல் நிறைய பேருக்கு இருப்பதில்லை; இது நீதிபதிகளுக்கும் பொருந்தும்.
சிறிய இனத்தவருக்கும் பெரிய பதவி: மிகக் குறைவாக வாழும் ஒரு இனத்தைச் சேர்ந்தவர்கள் கூட உயர் பதவி வகிப்பது இந்தியாவில் மட்டும் சாத்தியம். நமது அண்டை நாடுகளில் இதற்கு வாய்ப்பில்லை.
குறைவான மக்கள் தொகை (1-லட்சம்) கொண்ட பார்சி இனத்தவர்களில் கூட தலைமை நீதிபதியாக முடியும் என்பது இந்தியாவில் மட்டுமே. அதனால் இந்தியர் என்பதில் நான் பெருமை கொள்கிறேன் என்று கபாடியா தெரிவித்தார்.
அரசு இயற்றவுள்ள நீதித் துறையின் பொறுப்புணர்வு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு மாநிலங்களவையின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ள சில பிரிவுகள் நீதிபதிகளிடையே பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. அதில் கூறப்பட்டதாவது:
வழக்கின்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது அதிகாரிகளுக்கெதிராக ஆதாரமற்ற கருத்துகளை நீதிபதிகள் தெரிவிக்கக் கூடாது. கறை படிந்த நீதிபதிகளின் மீது சாதாரண குடிமகன்கூட வழக்கு பதிவு செய்ய முடியும் என்பதாகும். இந்த மசோதாதான் நீதிபதிகளுக்கு கடுப்பை ஏற்படுத்தியுள்ளதாம்.
0 கருத்துரைகள்:
Post a Comment