புதுடெல்லி:கடனில் தத்தளிக்கிறதாம் கிங் ஃபிஷர் விமான நிறுவனம். ஆதரவு கரம் நீட்ட மத்திய அரசும் தயாராகிவிட்டது. 7000 கோடி கடன் நெருக்கடிக்கு சொந்தமானதாக கூறப்படும் கிங் ஃபிஷர் மதுபான உலகின் முடி சூடா மன்னன் விஜய் மல்லையாவுக்கு சொந்தமானது.
இந்தியாவின் பல்வேறு தனியார் விமானங்கள் எல்லாம் லாபகரமாக வர்த்தகம் நடத்தும் வேளையில் விஜய மல்லையாவுக்கு மட்டும் ஏன் இந்த நெருக்கடி? புரியாத புதிராகத்தான் உள்ளது. அரசின் தொகுப்பு நிதியுதவி, குறைந்த பட்ச வட்டியில் கடன், வங்கிகளை பங்குதாரர்களாக மாற்றுவது ஆகிய தனது திட்டங்களை நிறைவேற்றுவதற்கான விஜய் மல்லையாவின் தந்திரம்தான் இந்த கடனில் தத்தளிக்கும் நாடகம் என பலரும் கருதுகின்றனர்.
கடனில் தத்தளிக்கும் கிங் ஃபிஷர் என்ற தனியார் நிறுவனத்திற்கு பொதுத்துறை வங்கிகள் எவ்வித கண்காணிப்புமின்றி கோடிக்கணக்கான பணத்தை ஏற்கனவே முதலீடுச் செய்துள்ளன. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐ.சி.சி.ஐ வங்கி உள்பட 13 வங்கிகளுக்கு கிங் ஃபிஷரின் நான்கில் ஒரு பகுதி பங்குகள் சொந்தம். அளித்த கடனை திரும்பி வாங்க இயலாமல் அவற்றை பங்குகளாக இவ்வங்கிகள் மாற்றிக்கொண்டன. முக மதிப்பை விட மிக உயர்ந்த விலைக்கு கடனில் தத்தளிக்கும் நிறுவனத்தின் பங்குகளை தேசிய மயமாக்கப்பட்ட வங்கி விலைக்கு வாங்கியது. இது சட்டத்திற்கு புறம்பான நிர்பந்தங்களை தொடர்ந்து நடந்த பரிவர்த்தனை ஆகும்.
கடனை மறுகட்டமைப்பு செய்ததோடு வங்கிகள் நடைமுறை மூலதனமாக 800 கோடி வழங்கவும் செய்துள்ளன. இதில் வட்டியில் சலுகையும் அளிக்கப்பட்டுள்ளது. கடனில் 10 இல் ஒரு பகுதியை பங்குகளாக வங்கிகள் வாங்கியுள்ளன. ஆனால் கடனில் 2500 கோடியை பங்குகளாக வாங்கவேண்டும் என மல்லையா நிர்பந்திக்கிறார். அதிக பங்குகளை சந்தையில் வெளியிட்டு நிறுவனத்திற்கு மூலதனத்தை அதிகரிப்பதற்கான திட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பொருளாதார நெருக்கடியின் காரணமாக இது இயலவில்லையாம்.
கிங்ஃபிஷர் விமான நிறுவனத்தின் சேர்மன் தெளிவான செயல் திட்டங்கள் எதுவுமில்லாமல் விமான நிறுவனத்தை நடத்துவதாக விமானப் போக்குவரத்து துறையை சார்ந்தவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். வங்கிகளிலும், அரசிடமும் நிர்பந்தம் அளிக்கிறாரே தவிர தனது இதர கம்பெனிகளின் நிதியை இந்நிறுவனத்திற்கு திருப்பும் எவ்வித திட்டமும் மல்லையாவுக்கு இல்லை. மது வியாபாரத்தை விரிவுப்படுத்துவதற்கான முயற்சியில்தான் அவர் ஈடுபட்டுள்ளார்.
விமான நிறுவனம் கடனில் தத்தளிப்பதற்கு காரணமாக விஜய் மல்லையா கூறுவது எரிபொருள் விலை உயர்வாகும். ஆனால் இந்த காரணத்தை பொருளாதார துறையை சார்ந்தவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. கடந்த ஆண்டு இந்நிறுவனத்திற்கு ஏற்பட்ட இழப்பு 1027 கோடி என கூறகிறார்கள். ஆனால் இதில் 200 கோடி ரூபாய் தான் எரிபொருளுக்கான பாக்கி உள்ளது. எரிபொருள் விலை உயர்வுதான் கடன் நெருக்கடிக்கு காரணம் என கூறும் மல்லையாவின் வாதம் பொய்யானது என்பது இதிலிருந்து நிரூபணமாகிறது.
விலைவாசி அதிகரித்து துயரத்தில் ஆழ்ந்துள்ள சாதாரண மக்களுக்கு உதவுவதற்கு பதிலாக மதுபான வியாபாரியின் தனியார் விமான நிறுவனத்திற்கு ஆறுதல் அளிக்க தொகுப்பு நிதியுதவியை வழங்க திட்டமிடும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல்வேறு வங்கிகளின் தொழிலாளர் யூனியன்களும் மத்திய அரசின் தொகுப்பு நிதியுதவிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
0 கருத்துரைகள்:
Post a Comment