வாஷிங்டன்:ஈரானின் ராணுவ தலைமையகத்தில் நேற்று முன்தினம் 17 பேர் மரணிக்க காரணமான குண்டுவெடிப்பின் பின்னணியில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொஸாத் செயல்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அமெரிக்க வலைப்பதிவர் ரிச்சார்டு சில்வர்ஸ்டெய்ன்(Richard Silverstein) என்பவர் உயர் இஸ்ரேலிய அதிகாரியை மேற்கோள்காட்டி இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அரபு-இஸ்ரேல் அரசியல் குறித்த விஷயங்களை விவாதிக்கும் டிக்குன் ஓலம் (Tikun Olam) என்ற வலைப்பூவில்(blog) இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஈரானில் அரசு எதிர்ப்பு போராளி இயக்கமான முஜாஹிதீனெ கலக்கை(எம்.இ.கெ) பயன்படுத்தி மொஸாதின் துணையுடன் குண்டுவெடிப்பு திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது என தெரிவிக்கும் சில்வர்ஸ்டெய்ன், உயர் இஸ்ரேலிய அதிகாரி இத்தகவலை அளித்ததாக கூறுகிறார்.
ஈரானில் பல்வேறு தாக்குதல்களை நடத்தவும், உளவு வேலைகளை பார்க்கவும் எம்.இ.கேயை பயன்படுத்தும் மொஸாத் கடந்த ஆண்டு இதைப்போன்ற தாக்குதல்களை ஈரானின் புரட்சிப்படையின் பல்வேறு மையங்களில் நடத்தியதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளையில் ஈரான் ராணுவ தலைமையகத்தில் நடந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் வெளிநாட்டு கரங்கள் இருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை புரட்சிப்படை நிராகரித்துள்ளது. ஆயுதங்களை கொண்டு செல்லும்பொழுது குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக படையின் செய்தித் தொடர்பாளர் ரமீஸ் ஷெரீஃப் தெரிவிக்கிறார். குண்டுவெடிப்பில் 17 ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். 16 பேருக்கு காயமேற்பட்டுள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment