டமாஸ்கஸ்:அணி தாவி எதிர்ப்பாளர்களுடன் சேர்ந்த சிரியா ராணுவத்தின் ஒரு பிரிவினர் அந்நாட்டின் ராணுவ ரகசிய புலனாய்வ மையத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
டமாஸ்கஸிற்கு வடக்கே ஹராஸ்தாவில் அமைந்துள்ள சிரியா விமானப்படை மையத்தின் மீதுதான் ஃப்ரீ சிரியா ஆர்மியை சார்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர் என மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர். இத்தாக்குதலில் யாரும் கொல்லப்பட்டது குறித்து உறுதிச் செய்யப்படவில்லை.
அரசுக்கு எதிரான போராட்டம் துவங்கிய பிறகு எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவான ராணுவத்தினர் நடத்தும் முதல் தாக்குதல் இதுவாகும். இப்பகுதியில் பல தடவை குண்டுவெடிப்புகளும், துப்பாக்கிச் சத்தமும் கேட்டதாக நேரில் கண்டவர்களை மேற்கோள்காட்டி அல்ஜஸீரா கூறுகிறது.
ராணுவ மையங்கள் மீது தாக்குதல் நடைபெறுவது இது முதல் தடவை அல்ல. ஆனால், தலைநகரமான டமாஸ்கஸில் உயர்மட்ட அலுவலகத்தின் மீது முதன் முறையாக இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிரியாவில் அதிபர் பஸ்ஸாருல் ஆஸாத் பதவியில் தொடர்வதற்கு ஏற்பட்டுள்ள சவாலாக இத்தாக்குதல் கருதப்படுகிறது. சிரியா ராணுவத்திலிருந்து விலகி ராணுவ வீரர்கள் எதிர்ப்பாளர்களுடன் சேருவதாக செய்திகள் வெளியாகி வரும் சூழலில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே சிரியாவின் விவகாரத்தை குறித்து விவாதிக்க மொரோக்கோவின் தலைநகரமான ரபாத்தில் நடைபெறவிருக்கும் அரபு லீக்கின் கூட்டத்தை புறக்கணிக்க சிரியா தீர்மானித்துள்ளது. சிரியா வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment