புதுடெல்லி:குஜராத் கலவர வழக்கில் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக சாட்சியம் அளித்த ஐ.பி.எஸ். அதிகாரியான தன்னுடைய கணவரை ‘பயங்கரவாதி’ போல் நடத்தப்படுவதாக குற்றம்சாட்டி, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு சஞ்சீவ் பட்டின் மனைவி ஸ்வேதா இரண்டாவது கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், தனது கணவருக்கு ஜாமீன் கிடைக்காத வகையில் எல்லாவித நடவடிக்கைகளையும் குஜராத் மாநில அரசு மேற்கொண்டு வருவதாக அவர் குறைகூறியுள்ளார்.
தனது கணவர் சஞ்சீவ் பட்டின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உள்துறை அமைச்சகத்துக்கு எழுதிய முதல் கடிதத்தில் ஸ்வேதா குறிப்பிட்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து, சிறையில் அடைக்கப்பட்டுள்ள சஞ்சீவ் பட்டுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு குஜராத் அரசை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டிருந்தது.
காவல்துறை ஐ.ஜி. பதவியில் இருந்த சஞ்சீவ் பட், தனக்கு கீழ் பணிபுரிந்த ஒரு காவல்துறை அதிகாரியிடம், மோடிக்கு எதிராக சாட்சியமளிக்கும்படி பலவந்தப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடைப்படையில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜாமீன் கோரி அகமதாபாத் செசன்ஸ் நீதிமன்றத்தில் சஞ்சீவ் பட் மனு தாக்கல் செய்தார். சஞ்சீவ் பட் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரிக்க கூடாது என குஜராத் மாநில அரசு தாக்கல் செய்த மனுவை நீதிபதி வியாஸ் தள்ளுபடி செய்தார்.
அதைத் தொடர்ந்து, ஜாமீன் மனு மீதான விசாரணையை தொடங்கினார். சஞ்சீவ் பட் சார்பாக வழக்கறிஞர் ஐ.எச்.சையீது ஆஜரானார். சிறிது நேரம் அவருடைய வாதம் முடிந்ததும் மனு மீதான விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
0 கருத்துரைகள்:
Post a Comment