Thursday, September 15, 2011

நாட்டில் ஒருவர்கூட பட்டினியால் இறப்பதை இனியும் அனுமதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

imagesCAE6IV0Y
புதுடெல்லி:பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைவு காரணங்களால் ஒருவர் இறப்பதை கூட அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.  இதை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

பொது விநியோகத் திட்டத்தில் ஏராளமான முறைகேடுகள் நடப்பதாக குற்றம்சாட்டி மக்கள் உரிமை கழகம்(பியுசிஎல்) என்ற அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்தது. இம்மனுவை நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் வர்மா ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது: நாட்டில் பட்டினி மற்றும் ஊட்டச் சத்து குறைவு காரணமாக ஒருவர் இறப்பதை கூட அனுமதிக்க முடியாது. ஏழைகள் எல்லோருக்கும் உணவு கிடைக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக கூடுதலாக எவ்வளவு உணவு தானியம் வேண்டும் என்பதை மாநில தலைமைச் செயலாளர்கள் 2 வாரத்திற்குள் தெரிவிக்க வேண்டும்.

அப்படி 2 வாரத்திற்குள் மாநில அரசுகள் தகவல் தெரிவிக்காவிட்டால், அந்த மாநிலங்களுக்கு கூடுதல் உணவு தானியம் தேவையில்லை என கருதப்படும். மாநில அரசுகளின் தேவையை பரிசீலித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பொது விநியோகத் திட்டத்தில் பெருமளவு முறைகேடுகள் நடக்கின்றன. உணவு தானியங்கள் கடத்தப்படுகின்றன.

பின்தங்கிய மாவட்டங்களில் பட்டினி, சத்துக்குறைவால் சாவது என்பது தொடர் கதையாகவுள்ளது. இனிமேலும் இந்த நிலை தொடரக்கூடாது. அங்கு பட்டினி, சத்துக்குறைவால் ஒருவர்கூட சாகவில்லை என்ற நிலையை மத்திய அரசு உருவாக்க வேண்டும். ஏழைகளுக்கு உணவு அளிப்பது அரசின் கடமை. இதை உணர்ந்து அரசு செயல்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது.

அதே போல், ஏழைகள் அதிகமாக உள்ள 150 மாவட்டங்களுக்கு 50 லட்சம் டன் தானியங்கள் வழங்க மத்திய அரசுக்கு  ஏற்கனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உணவு தானியங்கள் முறையாகப் போய் சேர்வதை ஒரு குழுவை நியமித்தும் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தர விட்டிருந்தது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza