Saturday, July 2, 2011

ஜும் ஆ பயான்-பொறாமையை விட்டொழியுங்கள்

நமதூரில் 1.7.2011 வெள்ளிகிழமை அன்று அல் மஸ்ஜிதுல் ஜாமிஆ பள்ளியில் ஜும்ஆ பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் இஸ்மாயீல் ஆலிம் அவர்கள் பொறாமையினால் ஏற்படும் விளைவுகள் மற்றும் அதற்கு காரணமாக அமைவது என்ன? என்பதனை பற்றி இஸ்லாமிய அடிப்படையில் சுட்டிகாட்டி உரை நிகழ்த்தினார்கள்.

பொறாமைகாரன் என்பவன் யார்?

அல்லாஹ்வுடைய அருட்கொடை ஒருவனுக்கு கிடைக்க கூடாதென்றும், கிடைத்த அருட்கொடை போய் விட வேண்டும் என எண்ணுபவனே பொறாமைகாரன். இந்த எண்ணம் ஒரு முஃமினுக்கு இருக்ககூடாத பண்பு.

பொறாமை நமது நல்ல அமல்களை நம்மிடமிருந்து அகற்றிவிடும். மேலும் நம்மை தீய, கொரூர குணம் கொண்டவர்களாக மாற்றிவிடும் என்பதற்கு திருமறை குர்ஆனில் பல எடுத்துகாட்டுகள் பொதிந்து கிடக்கின்றன.


அல்லாஹ்வின் படைப்பான இப்லீஸ் என்னும் ஷைத்தான் வானவர்களுக்கெல்லாம் முன்னோடியாக திகழ்ந்தவன். அல்லாஹ்வை அவனது வணக்க வழிபாட்டின் மூலம் மிகவும் நெருங்கியவன். அப்படிப்பட்ட ஒருவன் இறைவனால் தூக்கி எறியப்பட்டதற்கு காரணம் இந்த பொறாமை என்னும் தீய குணமே தவிர வேறில்லை. ஏன் தூக்கி எறியப்பட்டான் என்பதை குறிப்பிடும் போது,

நபி ஆதம்(அலை)அவர்களுக்கு இறைவன் 3 சிறப்புகளை வழங்கியிருந்தான்.

1.அறிவு ஞானம்

2.மனித குலத்திற்கு கலீபாவாக ஆக்கப்பட்டார்.

3.எல்லா படைப்புகளும் ஆதம் நபிக்கு சஜ்தா செய்ய வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டான்.

இதில் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்க மறுத்த இப்லீஸ் மண்ணால் படைக்கப்பட்ட இந்த நபருக்கு அவரை விட உயர்ந்தவனான நான் ஸஜ்தா செய்ய மாட்டேன் என்று தனது பெருமையையும், பொறாமையையும் ஒரு சேர வெளிபடுத்தினான். அந்த இறை கட்டளையை மீறியதன் காரணத்தால் அவன் சைத்தான் என்று சபிக்கப்பட்டு தூக்கி எறியப்பட்டான்.

நமக்கு கிடைக்காத சிறப்புகள் மண்ணால் படைக்கப்பட்ட ஆதம் நபிக்கு கிடைத்து விட்டதே என்று பொறாமை கொண்டதன் விளைவு இறைவனின் கோபத்திற்கு உள்ளாகி உலகத்தில் உள்ள மக்களுக்கு விரோதியாகி போனான்.

பொறாமை ஒருவனின் நல்ல அமல்களை அழித்து, அவனது நற்பெயர்களை கெடுத்து, இவ்வுலகிலும், மறு உலகிலும் ஈடேற்றம் பெறமுடியாத நிலையை ஏற்படுத்திவிடும் என்பதனை இப்லீஸின் வரலாறு நமக்கு  காட்டுகிறது.

மேலும் பொறாமை தான் தீய செயல்களுக்கு ஆரம்பமாக கருதப்படுகிறது. அதற்கும் திருமறையில் பல சான்றுகள் உண்டு. அதிலிருந்து நமக்கு படிப்பினையும் உண்டு.

உலகத்தில் நடந்த முதல் கொலை சம்பவம் இந்த பொறாமையினால் தான் ஏற்பட்டுள்ளது. நபி ஆதம்(அலை) அவர்களது புதல்வர்களான ஆபில், காபில் இருவரும் ஒரே பெண்ணை விரும்புகின்றனர். இதில் பிரச்சனை ஏற்படவே ஆபில் மேல் பொறாமை கொண்டு அவரை கொன்றுவிடுகிறார் காபில். தனது சகோதரர் என்று கூட யோசிக்காத அளவிற்கு கொடூரங்களை நிகழ்த்தும் பலம் பொறாமைக்கு உண்டு என்பதனை இந்த சம்பவம் உணர்த்துகிறது. இதுவே உலகில் நடைபெற்ற முதல் கொலை ஆகும்

முதலில் கொலையை அறிமுகப்படுத்தியதின் காரணமாக இவ்வுலகில் யார் கொலை செய்தாலும் அதில் ஒரு பங்கு அவரை (காபிலை) சேரும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நபி யூசுஃப் (அலை) அவர்களது வரலாறும் இதற்கு உதாரணம் ஆகும். தனது தந்தை தங்களைவிட தங்களது சகோதரன் மேல் பாசம் வைத்திருக்கிறார். அதனால் யூசுப் (அலை) இருக்கும் வரையில் நமக்கு தந்தையிடம் பாசம் கிடைக்காது என்று முடிவெடுத்த யூசுப் (அலை) அவர்களின் சகோதரர்கள் அவரை கொலை செய்ய முயற்சி செய்ததும், அதனால் பாலும் கிணற்றில் எறியப்பட்டு,அடிமை சந்தையில் விற்கப்பட்டு பல இன்னல்களை யூசுப் (அலை) அனுபவித்ததையும் அல்குர்ஆன் விளக்குகிறது.

இதனால் தான் இஸ்லாம் பொறாமை என்னும் தீய குணத்தை விட்டொழிக்க சொல்கிறது. நபி(ஸல்) அவர்கள்,"உங்களில் யாரும் பொறாமை கொள்ளாதீர்கள். அது உங்கள் நன்மைகளை அழித்து விடும்" என்று கூறினார்கள்.

அதே நேரத்தில் மற்றவர்கள் பொறாமை கொள்ளும் படி நடக்க வேண்டாம் என்றும் இஸ்லாம் கூறுகிறது. தன்னிடம் பணம் உண்டு, பதவி உண்டு, பலம் உண்டு என்பதற்காக அகம்பாவம் கொண்டு திரிய கூடாது. அது மற்றவர்கள் நம் மேல் பொறாமை கொள்ள தூண்டுவதாய் அமைந்துவிடும்.

நாம் ஒரு சாதாரண மனிதனாக வாழ கற்று கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு உதவும் பழக்க வழக்கத்தை நடைமுறை வாழ்க்கையில் கொண்டுவர வேண்டும். நல்ல முஃமினாக இருக்கும் பட்சத்தில் பொறாமை உணர்வு நம்மை விட்டு அகலும்.

மேலும் அண்டை வீட்டாரோடு இனக்கமாய் இருக்க வேண்டும். உங்கள் அண்டை வீட்டாரிடம் இல்லாத ஒன்றை நீங்கள் வைத்திருந்தால் அவர்களுக்கும் கொடுங்கள். அது அவர்களுக்கு உங்கள் மீதுள்ள பொறாமையை விட்டு அன்பை அதிகரிக்கும் என இஸ்லாமிய வரலாறுகளோடு நடைமுறை நிதர்சனங்களையும் கூறி பொறாமை என்ற அரக்க குணம் நம்மிடம் வராமல் இருக்க அல்லாஹ் உதவி செய்வானகவும் என்று பிரார்தித்து தனது உரையை நிரைவு செய்தார்.

சகோதரி அனிஷா பைசல்

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza