டமாஸ்கஸ்:அதிபர் பஸ்ஸாருல் ஆஸாத் பதவி விலகாமல் ஓயமாட்டோம் என பிரகடனப்படுத்தி சிரியாவின் பல்வேறு பகுதிகளில் தீவிரமான போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
சிரியாவின் வடமேற்கு-கிழக்கு பகுதிகளில் நடந்த பேரணிகளில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். துருக்கி எல்லையை ஒட்டிய ஜபல் அல் ஸாவிய்யா பகுதியில் அரசு ராணுவம் 12 பேரை சுட்டுக்கொன்றதாக மனித உரிமை ஆர்வலர் ராமி அப்துற்றஹ்மான் தெரிவித்துள்ளார். சிரியாவின் கிழக்கு பகுதியில் உள்ள பெரும்பாலான நகரங்களில் ‘பதவி விலகு’ என்ற முழக்கத்துடன் பிரம்மாண்ட பேரணிகள் நடைப்பெற்றதாக மனித உரிமை ஆர்வலர்களை மேற்கோள்காட்டி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மூன்று மாத காலமாக சிரியாவில் நடந்தவரும் தீவிர அரசு எதிர்ப்பு போராட்டத்தில் இதுவரை 1400 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சிறிது கால இடைவேளைக்கு பிறகு பஹ்ரைனில் நடந்த அரசு எதிர்ப்பு போராட்டத்தில் ராணுவத்தினருடனான மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். பஹ்ரைனில் பல்வேறு நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற அரசு எதிர்ப்பு பேரணிகள் நடைபெற்றதாக பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. ஹமத் அல் கலீஃபாவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரக்கோரி போராட்டம் நடத்திய எதிர்ப்பாளர்கள், எதிர்கட்சி தலைவர் உள்பட அநீதமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுதலைசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். எதிர்ப்பாளர்களை கலைத்துவிட ராணுவம் கண்ணீர் குண்டும், க்ரேனேடும் பிரயோகித்தது. இதற்கிடையே பேச்சுவார்த்தை நடத்தலாம் என்ற அரசின் நிலைப்பாட்டை எதிர்ப்பாளர்கள் நிராகரித்துவிட்டனர்.
அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் பதவி விலகக்கோரி யெமனில் நேற்று ஜும்ஆ தொழுகைக்கு பிறகு பல்வேறு நகரங்களில் பேரணிகள் நடைபெற்றன. அதே வேளையில், தற்போதைய அரசுக்கு எதிராக மாறுவார்கள் என்ற சந்தேகத்தை தொடர்ந்து ரிபப்ளிகன் கார்டு படையை சார்ந்த 12 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை கூறுகிறது. எதிர்ப்பாளர்கள் தலைவர்களுடன் இவர்கள் ரகசிய பேச்சுவார்த்தை நடத்திய தகவல் கிடைத்தையொட்டி கைது செய்யப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸாலிஹி மகன் அஹ்மத் கமாண்டராக செயல்படும் ரிபப்ளிகன் கார்டு யெமனில் உயர்ந்த பயிற்சியை பெற்ற ராணுவ பிரிவாகும்.

0 கருத்துரைகள்:
Post a Comment