மும்பை : இன்று லண்டனில் காலமான உலக புகழ் பெற்ற ஓவியர் எம்.எப். ஹுசேனை கடுமையாக எதிர்த்தவரும் அவரின் ஓவிய கண்காட்சிகளை தன் சிவசேனா தொண்டர்களை கொண்டு சேதப்படுத்திய சிவசேனா தலைவர் பால் தாக்கரே ஹூசேனுக்கு அல்லாஹ் சாந்தி அளிக்கட்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் தன் அறிக்கையில் ஹுசேனின் மரணம் நவீன கால ஓவியத்துக்கு நேர்ந்த பேரிழப்பு என்றும் மரணத்திலாவது அவருக்கு சாந்தி கிடைக்கட்டும் என்று கூறினார். தணியாத வேகத்துடன் ஓவியக்கலையை தொடர்ந்த அவர் இந்து கடவுள்களை வரையும் போது தான் வழுக்கி விட்டார் என்றார். அவரின் மருமகனான ராஜ் தாக்கரே ஹூசேனின் மரணத்துடன் அவர் மீதான சர்ச்சைகள் முடிந்து விடட்டும் என்றார்.
ஃபோபஸ் சஞ்சிகையினால் 'இந்தியாவின் பிக்காஸோ' என வர்ணிக்கப்பட்ட இவர், 1955 ஆம் ஆண்டில் இந்தியாவின் உயர் விருதான 'பத்மஸ்ரீ' விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
1967 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இவரது முதல் திரைப்படமான 'த்ரூ தி ஐஸ் ஒஃப் பெயிண்டர்' (Through the Eyes of a painter) பேர்ளின் திரைப்பட விழாவில் 'கோல்டன் பெயார்' விருதை தட்டிச் சென்றமை குறிப்பிடத்தக்கது. கஜகமினி (Gaja Gamini), மீனாட்சி: எ ட்டேல் ஒஃப் த்ரீ சிட்டீஸ் (Meenaxi: A Tale of Three Cities) என்பன இவரது குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும். இவர், இந்தியாவின் பத்மபூஷன் (1973), பத்ம விபூஷன் (1991) ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1970 களில் இவர் வரைந்த சில ஓவியங்கள் குறித்த சர்ச்சைகள் 1996 ஆம் ஆண்டு சூடுபிடிக்கலாயின. இந்துக் கடவுளரின் நிர்வாண ஓவியங்களை வரைந்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் இவர்மீது பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டதோடு பஜ்ரங்தள், ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களால் அவரது வீடு சுற்றிவளைக்கப்பட்டு பலமுறை தாக்குதலுக்குள்ளானது. அதையடுத்து, இடையறாத கொலை மிரட்டல்களும் வரத் தொடங்கவே, 2006 ஆம் ஆண்டு அவர் இந்தியாவை விட்டு வெளியேறினார். தாய் நாட்டைவிட்டு வெளியேறிய கடந்த சில வருடகாலத்தை துபாய் மற்றும் லண்டனில் கழித்த இவருக்கு, கடந்த வருடம் (2010- ஜனவரியில்) கட்டார் அரசினால் பிரஜா உரிமை வழங்கப்பட்டது.


0 கருத்துரைகள்:
Post a Comment