மும்பை புறநகர் பகுதியில் ஆங்கில செய்தி பத்திரிகையின் மூத்த செய்தியாளர் மர்ம நபர்களால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள அதிர்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
“மிட் டே” எனப்படும் ஆங்கில பத்திரிகையில், சிறப்பு புலன் விசாரணை ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஜோதேந்திர டே (வயது 50). ”ஜே. டே” என்ற பெயரில் மிகவும் பிரபலமானவர். மும்பை நகரில் ஊடகங்கள், காவல்துறை மற்றும் அரசியல் வட்டாரங்களில் இவர் மிகவும் புகழ் பெற்றவராக இருந்துள்ளார். இவர் மும்பை நிழல் உலக தாதாக்களின் குற்ற செயல்கள் பற்றி தொடர்ந்து பத்திரிகையில் எழுதி வந்துள்ளார்.
நேற்று சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில், மும்பை போவாய் பகுதியில் ஹிரானந்தனி கார்டன்ஸ் எனும் இடத்தில் ஜோதேந்திர டே சென்று கொண்டிருக்கையில், இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 4 மர்ம நபர்கள் அவரை மிகவும் சமீபத்தில் வைத்து சரமாரியாக சுட்டுத் தள்ளிவிட்டு தப்பி ஓடிவிட்டுள்ளனர்.
காவல்துறை கூடுதல் ஆணையர் விஷ்வாஸ் நாங்ரே படீல் கூறுகையில், அவரது உடலில் ஒன்பது இடங்களில் துப்பாக்கி குண்டுகள் துளைத்த காயங்கள் இருந்ததாகவும், சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் உயிர் பிரிந்துவிட்டது என்றும் கூறியுள்ளார்.
மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.படீல் கூறுகையில், ஆரம்ப கட்ட விசாரணையில் கொலைக்கான காரணம் தெரிய வந்துள்ளதாகவும், கொலையாளிகளை பிடிக்கும் விஷயத்தில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மும்பை காவல்துறை ஆணையர் அரூப் பட்நாயக் மற்றும் இணை ஆணையர் (குற்றப் பிரிவு) மற்றும் சில உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
முதல்வர் பிரிதிவிராஜ் சவான் கூறுகையில், இச்சம்பவம் சம்பந்தமாக உயர் அதிகாரிகளை சந்தித்து பேச இருப்பதாகவும், செய்தியாளர்களுக்கு உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படுமானால் காவல்துறைக்கு தெரியப்படுத்தும்படி கேட்டுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.


0 கருத்துரைகள்:
Post a Comment