புது தில்லி : மத்திய பிரதேசத்தை சார்ந்த இரு பிரபல காங்கிரஸ் தலைவர்கள் புது தில்லியில் ஊழலுக்கு எதிராக சத்தியாக்கிரகம் நடத்தி, காவல்துறை நடவடிக்கை மூலம் சர்ச்சைக்குள்ளான பாபா ராம்தேவ் குறித்து மாறுபட்ட நிலைப்பாட்டில் இருப்பதால் மத்திய பிரதேசத்தில் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
பல பிரச்சினைகளில் சற்று சுதந்திரமாக தன் கருத்தை வெளியிடும் காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான திக் விஜய் சிங், ராம்தேவின் உண்ணாவிரதத்தை 5 நட்சத்திர சத்தியாக்கிரகம் என்று வர்ணித்ததோடு, யோகாவின் மூலம் தன் வாழ்வை வளமாக்கியவர் என்றெல்லாம் குற்றம் சாட்டினார். இதற்கும் ஒரு படி மேலாகச் சென்று பாபா ராம்தேவை மோசமான கிரிமினல் என்று சொன்னதோடு, பாபாவின் சொத்துக்கள் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் சொன்னார்.
ஆனால், சமீபத்தில் மே 23 அன்று தான் மத்திய மந்திரி கமல்நாத் தன் சொந்த ஊரான சிந்த்வாராவில் ராம்தேவ் நடத்திய பாரத் ஸ்வாபிமான் யாத்ராவில் கலந்து கொண்டார். ராம்தேவுடன் ஓரே மேடையில் தோன்றிய கமல்நாத் பல்வேறு ஆசனங்களைக் கற்று கொண்டதோடு, “ ஊழல் என்பது மிகப் பெரும் பிரச்னை. சிந்த்வாராவின் மக்கள் மாத்திரமல்லாமல் ஐக்கிய முன்னணி அரசாங்கம் உள்ளிட்ட நாட்டு மக்கள் அனைவரும் ராம்தேவுக்கு ஆதரவளிக்க வேண்டும்” என்றார்.
மேலும், கமல்நாத் பாபா ராம்தேவை மஹாராஜா என்றதோடு, அவரைத் தன் வீட்டில் உணவு உண்ணவும் அழைத்தார். வாஞ்சையோடு தன் வீட்டிற்கு உணவு உண்ண அழைத்ததோடு, மஹாராஜா என்று பட்டமளித்து பாபாவின் போராட்டத்துக்கு ஆதரவளித்த மத்திய அமைச்சரின் செயலுக்கு முரணாக ராம்தேவின் போராட்டத்தை தகர்த்த மத்திய அரசாங்கத்தின் செயலும் திக்விஜய்சிங்கின் தாக்குதலும் உண்மையிலேயே காங்கிரஸுக்கு ராம்தேவ் ஓர் மஹாராஜாவா அல்லது கிரிமினலா என்ற குழப்பத்தை அதன் தொண்டர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது.


0 கருத்துரைகள்:
Post a Comment