தமிழகத்தில் சமச்சீர் கல்வி திட்டம் தொடர்பான வழக்குகள் உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் உள்ள நிலையில், 15 நாட்கள் கூடுதல் விடுமுறைக்குப் பின்னர் ஜூன் 15ல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்தபடி நேற்று தமிழகம் முழுவதும் அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகளும் நீண்ட விடுமுறைக்குப் பின்னர் புதிய சீருடை, நோட்டுகள், புத்தகப்பையுடன் உற்சாகமாக பள்ளிகளுக்குச் சென்றனர்.
பெற்றோர் ஆர்வத்துடன் தங்களது குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துவந்தனர். 1 மற்றும் 6 ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகள் தவிர மற்ற வகுப்புகளுக்கு, இதுவரை பாடத்திட்டமே முடிவாகாத நிலையில் வகுப்புகளில் ஆசிரியர்கள் என்ன நடத்தப்போகிறார்கள் என்ற கேள்வி பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது.
நிபுணர்குழுவினர் சமச்சீர் கல்வியை ஆராய்ந்து 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்து, அதனடிப்படையில் 1 வாரத்தில் உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கவேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. அதுவரை மற்ற வகுப்புகளுக்குப் பாடம் நடத்த தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் விளையாட்டுத்தனமும், குறும்புத்தனமும் நிறைந்த மாணவ-மாணவிகளை வகுப்பறைகளில் அமைதியாக கையாளும் இக்கட்டான நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். பள்ளி திறப்பு முதல் நாளான நேற்று பல பள்ளிகளில் அந்தந்த வகுப்பறைகளில் மாணவ-மாணவிகளின் பெயர், பெற்றோர் விவரம், எதிர்கால நோக்கம் குறித்து ஆசிரியர்கள் கேட்டறிந்தனர். இதனால் மாணவர்கள் குஷியானார்கள்.
பல பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்குப் பாடப்புத்தகங்கள் வினியோகிக்கும் பணி ஜரூராக நடந்தது. அரசின் வாய்மொழி உத்தரவின் பேரில் 1 மற்றும் 6 ம் வகுப்புக்குப் புத்தகங்கள் விநியோகிக்கப்படவில்லை. மேலும் சில பள்ளிகளில் முதல்நாள் என்பதால் ஒரு சில மணி நேரமே வகுப்புகள் நடந்தன.
முதல் நாளை திக்கி திணறி கடத்திவிட்ட நிலையில், பாடத்திட்டம் முடிவாகும்வரை அடிப்படை பயிற்சிகள் (பிரிட்ஜ் கோர்ஸ்) ஆங்கில இலக்கணம், தனித்திறன் வளர்ப்பு பயிற்சிகள், நல்லொழுக்க பாடங்கள், விளையாட்டு வகுப்புகள் என ஒவ்வொரு நாளும் பாடவேளைகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
"என்ன பயிற்றுவிக்க வேண்டுமென்றே தெரியாத கண்ணைக் கட்டிவிட்டது போன்ற இந்த நிலைமையினை இதுவரை சந்திக்கவே இல்லை" என பள்ளி நிர்வாகத்திடம் ஆசிரிய, ஆசிரியைகள் புலம்பித் தீர்த்தனர். ஆனால் பள்ளிகள் திறந்தும், பாடங்கள் இல்லாததால் மாணவர்கள் படுகுஷியாக உள்ளனர். நெல்லை மாவட்ட கிராமப்புறங்களில் பல பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கியதும் பலர் மைதானத்துக்கு கிரிக்கெட் விளையாட சென்றார்கள்.
நெல்லை மாவட்டத்தில் மெட்ரிக் பள்ளிகளைப் பொறுத்தவரை எதைப்பற்றியும் கவலைப்படாமல் பழைய பாடத்திட்டத்தின் அடிப்படையில் நேற்று வகுப்புகளை நடத்தினர். சமச்சீர் கல்வித்திட்டம் அறிவிக்கப்பட்டாலும் மெட்ரிக் பாடத்திட்டத்தின் அடிப்படையில்தான் இந்தாண்டில் வகுப்புகள் நடைபெறும் என்று கூறி பள்ளிக்குக் குழந்தைகளைவிட வந்த பெற்றோர்களிடத்தில் புத்தகத்திற்கென கணிசமான கட்டணத்தையும் விடாப்பிடியாக வசூலித்து அனுப்பினர் பள்ளி நிர்வாகத்தினர். "என்ன நடந்தாலும் இவர்கள் மட்டும் திருந்தவேமாட்டார்கள்" என்று புலம்பிக்கொண்டே பெற்றோரும் அவர்கள் கேட்ட தொகையைக் கொடுத்துவிட்டு செய்வதறியாது திரும்பிச் சென்றனர்.

0 கருத்துரைகள்:
Post a Comment