நாகர்கோவில் அருகே உள்ள தெற்கு சூரங்குடி அத்திக்கடவு என்ற இடத்தைச் சேர்ந்தவர் லிங்கேஸ்வரன். இவரது மகன் அனீஷ் (வயது 21). இவர் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். அனீசும், அவருடன் படித்த நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த சரவணன் (20), சிவகாசி சாத்தியாபுரத்தைச் சேர்ந்த ராஜசேகர் (20) ஆகியோர் ஒரு வார புராஜக்ட் பயிற்சிக்காக நாகர்கோவில் பி.எஸ்.என்.எல். அலுவலகத்துக்கு வந்தனர்.
அத்திக்கடவில் உள்ள அனீஷ் வீட்டில் தங்கியிருந்து அவர்கள் பயிற்சிக்கு சென்று வந்தனர். இன்று காலை அவர்கள் 3 பேரும் அங்குள்ள சம்பக்குளத்தில் குளிக்கச் சென்றனர். ராஜசேகர் நீச்சல் தெரியாது என்று கூறி கரையில் இருந்து கொண்டார். மற்ற 2 பேரும் குளிப்பதற்காக குளத்தில் இறங்கினர். சரவணன் சிறிது தூரம் குளத்துக்குள் சென்ற நிலையில் திணறி நீரில் மூழ்கினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அனீஷ், அவரை காப்பாற்ற முயன்றார். ஆனால் அவரால் சரவணனை காப்பாற்ற முடியவில்லை. மாறாக சரவணனுடன் சேர்ந்து அவரும் நீரில் மூழ்கினார்.
நண்பர்கள் 2 பேர் நீரில் மூழ்கியதை பார்த்த ராஜசேகர் கதறி அழுது சத்தம் போட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். அவர்கள் குளத்தில் இறங்கி மாணவர்கள் 2 பேரையும் தேடினர். தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்களும் ராஜாக்கமங்கலம் போலீசாரும் விரைந்து வந்தனர்.
சில மணி நேர தேடுதலுக்கு பிறகு அனீஷ், சரவணன் ஆகியோர் பிணமாக மீட்கப்பட்டனர். அனீசின் உடல்களை பார்த்து அவரது பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர்.
சரவணன் இறந்தது பற்றி அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 கருத்துரைகள்:
Post a Comment