Tuesday, June 7, 2011

பாபா ராம்தேவின் 10 ஆதரவாளர்கள் கைது!

யோகா குரு பாபா ராம்தேவின் 10 ஆதரவாளர்கள் நேற்று டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஞாயிறு அன்று ராம்லீலா மைதானத்தில் ரகளையில் ஈடுபட்டதாகவும், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்ததாகவும், அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவர்கள் காவல்துறையினர் மீது செங்கற்களையும், பூந்தொட்டிகள் மற்றும் மேடையிலிருந்த பொருட்களை வீசி எறிந்து தாக்கியுள்ளனர். அவர்களில் சிலர் கூட்டத்தை தூண்டிவிட்டு, காவலர்கள் கடமையைச் செய்தபோது தடுத்ததாகவும், கம்லா மார்க்கெட் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவர்களில்5 பேர் ஹரியானா மாநிலத்தையும், 2 பேர் டெல்லியையும், ராஜஸ்தான், மதிதிய பிரதேசம்,மற்றும் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த தலா ஒருவர் ஆவர்.

நிறைய பேர் காயமடைந்த  சத்யாக்கிரகம் நடைபெற்ற இடத்தை படம்பிடித்துள்ள தொலைக்காட்சி செய்தி சானல்களை காவல்துறையினர் அணுகியுள்ளனர். ராம்லீலா மைதானத்தில் காமிரா கருவிகள் பொருத்தி படம்பிடித்துள்ள ஒரு தனியார் நிறுவனத்தையும் காவல்துறையினர் அணுகியுள்ளனர். காவல்துறையினர் இந்த வீடியோ படங்களை பரிசோதித்துப் பார்த்து, ராம்தேவ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது தடியடி பிரயோகம் நடத்தப்பட்டதற்கான, உச்ச நீதிமன்றம் கேட்டுள்ள அறிக்கையினை,   தயாரிக்க உள்ளனர்.

ஒரு காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளதாவது: ”அந்த இடத்தில் யோகா நடத்துவதற்கான அனுமதி வாபஸ் பெறப்பட்டதாலும், பாபாவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக இரகசிய தகவல் கிடைத்துள்ளதாலும், பாபா ராம்தேவை உடனே அந்த இடத்தைவிட்டு விலகச் சொன்னோம். ஆனால் அவர் அதைச் செய்யாமல், மேடையிலிருந்து குதித்து அவரது ஆதரவாளர்களுடன் கலந்து கொண்டார். இது அங்கிருந்த நிலைமையை மேலும் மோசமாக்கவே,எங்களுக்கு வேறு வழிதெரியவில்லை”. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

மேலும், சத்தியாகிரகத்தில் பங்கேற்க திரளான மக்கள் டெல்லியை நோக்கி வந்துகொண்டிருந்ததால், இரவுக்குள் அந்த இடத்தை காலி செய்விக்க வேண்டிய அவசியம் காவல்துறையினருக்கு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza