பிளஸ் டூ தேர்வில், தமிழ் அல்லாத பிறமொழிகளை முதன்மை பாடமாக எடுத்து படித்த மாணவ- மாணவியர்களையும் சேர்த்து கணக்கிட்டால், சென்னை மாணவி கே.சந்தியா, மாநில அளவில் முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
பிளஸ் டூ தேர்வு முடிவுகள், இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டன. இன்று வெளியான பிளஸ் டூ தேர்வில், தமிழை முதன்மை பாடமாக எடுத்து படித்த, ஓசூர் விஜய் வித்யாலயா மெட்ரிக் மேலநிலைப்பள்ளி மாணவி ரேகா, 1,190 மதிப்பெண்கள் பெற்று, மாநிலத்திலேயே முதல் இடத்தை பிடித்ததுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
சமஸ்கிருதத்தை முதன்மை பாடமாக எடுத்து படித்த, சென்னை குரோம்பேட்டை எஸ்.ஆர்.டி.எப். வித்யாலயா பள்ளி மாணவி கே.சந்தியா, 1191 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். தமிழும், மற்ற பிறமொழிகளையும் முதன்மை பாடமாக எடுத்து படித்த மாணவ- மாணவியர்களை ஒட்டு மொத்தமாக சேர்த்து கணக்கிட்டால், சென்னை மாணவி கே.சந்தியாவே மாநில அளவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது அறியமுடிகிறது.
பாட வாரியாக கே.சந்தியா எடுத்துள்ள மதிப்பெண்கள் விபரம்:- சமஸ்கிருதம்- 198 ஆங்கிலம்- 194 இயற்பியல்- 199 வேதியல்- 200 கம்ப்யூட்டர் சயின்ஸ்- 200 கணிதம்- 200 ஆக மொத்தம் 1191. ஓசூர் மாணவி ரேகாவை விட 1 மதிப்பெண் கூடுதலாகப் பெற்றுள்ளார்.
இதேபோன்று பிரஞ்சு மொழியை முதன்மை பாடமாக எடுத்து படித்த, சென்னை தியாகராய நகர், வித்யோதயா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி மாணவி வி.ஆர்.ஜெயப்பிரதா, அனைத்து மொழி பாடப்பிரிவில் 1190 மதிப்பெண்கள் எடுத்து, ஓசூர் மாணவி ரேகாவுடன் மாநில அளவில் 2-வது இடத்தை பகிர்ந்து கொள்கிறார்.
பிரஞ்சு மொழியை முதன்மை பாடமாக எடுத்து படித்த இன்னொரு மாணவி மகாலட்சுமி, அனைத்து மொழி பாடப்பிரிவில் 1189 மதிப்பெண்கள் எடுத்து, மாநில அளவில் 3ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
அனைத்து மொழிப்பிரிவுகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த நான்கு பேரும் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:
Post a Comment