பெய்ரூத்,ஜன.18:புதிய அரசை உருவாக்குவதற்கு லெபனானில் தற்காலிக பிரதமராக பதவியிலிருக்கும் ஸஅத் அல் ஹரீரிக்கு ஆதரவளிக்கமாட்டோம் என ஹிஸ்புல்லாஹ் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ் தெரிவித்துள்ளார்.
ஹிஸ்புல்லாஹ் தனது ஆதரவை விலக்கிக் கொண்டதால் ஹரீரியின் அரசு கவிழ்ந்தது. இதனைத் தொடர்ந்து முதன் முதலாக ஹிஸ்புல்லாஹ்வின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி சேனலான அல்மனாரில் உரைநிகழ்த்திய நஸ்ருல்லாஹ் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அரசுக்கு ஆதரவை வாபஸ்பெற்ற தமது கட்சியின் நிலைப்பாடு அரசியல் சட்டத்தின்படியும், ஜனநாயக ரீதியிலானதாகும் என நஸ்ருல்லாஹ் கூறினார்.
ஸஅத் ஹரீரியின் தந்தையும் லெபனானின் முன்னாள் பிரதமருமான ரஃபீக் ஹரீரியின் கொலைவழக்குத் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஐ.நாவால் நியமிக்கப்பட்ட தீர்ப்பாயம் குறித்த சர்ச்சை லெபனான் அரசை நெருக்கடிக்குள்ளாக்கியது.
கொலைக் குற்றத்தை தீர்ப்பாயம் ஹிஸ்புல்லாஹ்வின் மீது சுமத்தும் எனக் கருதப்படுகிறது. தீர்ப்பாயம் அரசியல் மயமாக்கப்பட்டதால் நாங்கள் அதனை எதிர்க்கிறோம். லெபனான் எங்களது தாய் நாடாகும். அதன் ஸ்திரத்தன்மையிலும், பாதுகாப்பிலும் பிறரைவிட எங்களுக்கு அதிக ஆர்வம் உண்டு என நஸ்ருல்லாஹ் தெரிவித்தார்.
நெதர்லாந்தை தலைமையிடமாகக் கொண்ட தீர்ப்பாயம் அமெரிக்க, இஸ்ரேல் சதித்திட்டத்தின் அடிப்படையில் செயல்படுகிறது என்பது ஹிஸ்புல்லாஹ்வின் குற்றச்சாட்டு.
ரஃபீக் ஹரீரியை கொன்றது இஸ்ரேல் என்பதற்கான தெளிவான ஆதாரங்களை முன்னர் ஹிஸ்புல்லாஹ் வெளியிட்டிருந்தது. தீர்ப்பாயத்தை நிராகரிக்க வேண்டுமென ஹிஸ்புல்லாஹ் கோரியதை ஸஅத் அல் ஹரீரி மறுத்ததுதான் ஹிஸ்புல்லாஹ் ஆதரவை வாபஸ் பெறக் காரணமாகும்.
செய்தி:பாலைவனதூது
0 கருத்துரைகள்:
Post a Comment