Tuesday, January 18, 2011

சுவிஸ் வங்கி ஆவணங்கள் விக்கிலீக்ஸ் வசம்

லண்டன்,ஜன.18: 2ஆயிரத்திற்கும் அதிகமான பிரமுகர்களின் சுவிஸ் வங்கிக் கணக்குகளை அவ்வங்கியின் முன்னாள் அதிகாரியொருவர் விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அஸான்ஜேவிடம் ஒப்படைத்துள்ளார்.

கடந்த 2002 ஆம் ஆண்டு ஜூலியஸ் பெயர் என்ற சுவிஸ் வங்கியிலிருந்து வெளியேற்றப்பட்ட ருடோல்ஃப் எல்மர் லண்டனில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் வைத்து 2 டிஸ்க்குகளில் அடங்கிய ஆவணங்களை ஜூலியன் அஸான்ஜேவிடம் ஒப்படைத்தார்.

ஆவணங்களை பரிசோதித்த பிறகு அனைத்தையும் விக்கிலீக்ஸ் வெளியிடும் என அஸான்ஜே உறுதியளித்தார். வங்கி ரகசிய சட்டங்களை மீறியதற்காக வருகிற புதன்கிழமை எல்மர் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.

பன்னாட்டு நிறுவனங்கள், பொருளாதார ஸ்தாபனங்கள், பிரிட்டன், அமெரிக்கா, ஜெர்மனி உள்பட உலகின் பல்வேறு நாடுகள் ஆகியவற்றிலுள்ள கோடீஸ்வரர்களின் கணக்கு விபரங்கள் இந்த ஆவணங்களில் அடங்கியுள்ளன என சுவிஸ் நாட்டு பத்திரிகையான டெர் ஸோண்டாக் கூறுகிறது.

இந்தியர்களின் விபரங்கள் இதில் அடங்கியுள்ளனவா? என்பது தெரியவில்லை. கறுப்புப் பணத்தை மறைத்துவைக்க இந்தியாவில் அரசியல்வாதிகள் உள்பட ஏராளமானோர் சுவிஸ் வங்கியை பயன்படுத்துவது உண்டு.

கடந்த 1990 ஆம் ஆண்டிற்கும் 2009 க்கும் இடையிலான விபரங்கள் விக்கிலீக்ஸிற்கு கிடைத்துள்ளது. ஆவணங்களை பரிசோதிக்க எவ்வளவு காலம் தேவைப்படும் என்பது அதன் அளவைப் பொறுத்தது என தெரிவித்த அஸான்ஜே இதற்காக துறை சார்ந்த வல்லுநர்களின் உதவியை பெறப்படும் என தெரிவித்தார்.

ஜூலியஸ் பெயர் வங்கியிலிருந்து ஏற்கனவே எல்மர் வெளியிட்ட ஆவணங்கள் வரி ஏய்ப்பு மற்றும் இதர பொருளாதார குற்றங்களை வெளிப்படுத்தியிருந்தது. சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தை மிக ரகசியமாக பாதுகாப்பதற்காக தனியாக ஒரு நெட்வொர்க்கே செயல்படுகிறது என ஜூலியஸ் பெயரின் முன்னாள் சீஃப் ஆபரேட்டிங் அதிகாரியான எல்மர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

சுவிஸ் வங்கி சட்டங்களை மீறியதற்காக ஏற்கனவே 30 தினங்கள் சிறைத் தண்டனை அனுபவித்திருந்தார் எல்மர். தனது வாயை மூடுவதற்காக பெருந்தொகையை அன்பளிப்பாக தருவதாகவும், வழக்கை வாபஸ் பெறப் போவதாகவும் ஆசைவார்த்தைகள் கூறப்பட்டன என எல்மர் தெரிவிக்கிறார்.
செய்தி:பாலைவனதூது 

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza