ஈரானுடனான இராணுவத் தொடர்புகளை மேம்படுத்துவதில் தமது நாடு அக்கறைகாட்டி வருவதாகக் கட்டார் கடற்படைக் கமாண்டர் முஹம்மத் நாஸர் முபாரக் அல் முஹன்னதி தெரிவித்துள்ளார்.
ஈரான்- கட்டார் ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு மற்றும் இராணுவ ஒப்பந்தம் என்ற அடிப்படையில் ஈரான் இஸ்லாமியப் புரட்சிப் படையணியினரின் தோஹா விஜயம் அமைந்துள்ளது எனவும் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரப்பாட்டை நிலைநாட்டும் முயற்சியில் இருநாடுகளுக்கிடையிலான இத்தகைய நல்லுறவு விஜயங்கள் எதிர்காலத்திலும் தொடரவேண்டும் எனத் தாம் விழைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இராணுவ மற்றும் ஏனைய துறைகளில் ஈரானுடனான தொடர்புகளை மேம்படுத்துவது தொடர்பில் தாம் அதிகக் கரிசனை கொண்டுள்ளதாக கட்டார் கடற்படைக் கமாண்டர் முஹன்னதி வலியுறுத்தியுள்ளார்.
கட்டாரில் இருந்து ஈரானுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அவர், ஈரானின் முக்கிய இராணுவப் பிரமுகர்களைச் சந்தித்ததோடு விசேட கடற்படை அணிவகுப்பு மரியாதையையும் பெற்றுக்கொண்டார். இந்த மரியாதை அணிவகுப்பின்போது ஷஹீத் ஸொஹ்ராபி, ஷஹீத் தாரா, ஷஹீத் மஹ்தாவி எனும் மூன்று ஏவுகணைக் கப்பல்களும், நாஸர் 111, நாஸர் 112 எனும் இரண்டு போர்க்கப்பல்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஈரானின் கருத்துக்களுக்கு மறுமொழியளித்துப் பேசிய கட்டார் படையணிகளின் தலைவர் மேஜர் ஜெனரல் ஹமாத் பின் அலி அல் அதிய்யா, ஈரானுடனான தரை மற்றும் கடற்படைப் பயிற்சிகளில் கூட்டாக இணைந்து செயற்படத் தமது நாடு தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை (24.12.2010) ஈரானியக் கடற்படைத் தலைவர் ஜெனரல் அலி ரெஸா நாஸிரியையும் தோஹாவுக்கான ஈரானியத் தூதுவர் அப்துல்லாஹ் ஸொஹ்ராபியையும் ஜெனரல் ஹமாத் பின் அலி அல் அதிய்யா சந்தித்துப் பேசியுள்ளார்.
கடந்த சில மாதகாலமாக ஈரானுக்கும் கட்டாருக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகள் படிப்படியாக மேம்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, கடந்த 20 ஆம் திகதி ஈரானுக்கு ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட கட்டார் அதிபர் ஷேய்க் ஹமாத் பின் கலீஃபா அல் தானி ஈரானிய அதிபர் மஹ்மூத் அஹ்மத் நிஜாத்தைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.
செய்தி :பாலைவனதூது
0 கருத்துரைகள்:
Post a Comment