Wednesday, December 1, 2010

பலஸ்தீன் இளம் தாய் கைது- ஆக்கிரமிப்புப் படையின் அடாவடி

நஃப்ஹா சிறைச்சாலையில் உள்ள தன்னுடைய சகோதரனைச் சந்திக்கச் சென்ற பலஸ்தீன் இளம் தாய் மரியம் அல் ஹூர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார் என அவரது குடும்பத்தினர் தகவல் அளித்துள்ளனர். 

மூன்று ஆயுட்கால சிறைத்தண்டனைகள் விதிக்கப்பட்டவரான ஜமால் அல் ஹூர் எனும் தன்னுடைய சகோதரனைச் சந்திப்பதற்காகச் சென்றிருந்த மேற்படி பலஸ்தீன் பெண்மணியைத் திடீரென்று கைதுசெய்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை, கடந்த செவ்வாய்க்கிழமை (30.11.2010) அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரது தடுப்புக்காவலை நீடிக்குமாறு கோரியுள்ளது.

சிறையில் உள்ள தன்னுடைய சகோதரருக்கு கைத்தொலைப்பேசியொன்றைத் திருட்டுத்தனமாக வழங்க முயன்றதான பொய்க் குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள பல குழந்தைகளின் தாயான பலஸ்தீனப் பெண்மணி அல் கலீல் நகரின் சோரிஃப் கிராமத்தைச் சேர்ந்தவராவார். அவர் மீது சுமத்தப்பட்டுள்ள மேற்படிக் குற்றச்சாட்டை அவரது உறவினர்கள் வன்மையாக மறுத்துள்ளதோடு, அநியாயமாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மரியமை உடனடியாக விடுதலை செய்யுமாறும் வேண்டியுள்ளனர்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை தனது கொடூரமான சித்திரவதைகளின் மூலம் 'இஸ்ரேலின் மீது பல்வேறு ஷெல் தாக்குதல்களை மேற்கொண்டதாக' பலவந்த வாக்குமூலமொன்றைப் பெற்றே ஜமால் அல் ஹூர் மீதான குற்றச்சாட்டைத் திணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


SOURCE - INNERAM.COM

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza