இன்றைய சூழ்நிலைகளை பற்றி நாம் அனைவரும் அறிந்தே வைத்திருக்கின்றோம். ஒரு புறம் சமூகத்திற்கு பிரச்சனை, மற்றொரு புறம் சமூகத்திற்க்குள் பிரச்சனை. இந்த இரண்டையும் விவேகமாக கையாள்வதில் தான் இஸ்லாத்தின் வெற்றியும் நம்முடைய லட்சிய பயணத்தின் இலக்கும் அடங்கியிருக்கின்றது.
நம்முடைய (இஸ்லாத்தின்) எதிரிகள் இஸ்லாத்தையும், இஸ்லாமியர்களையும் துடைத்து எரிவதற்கு, முஸ்லிம்களை பிரித்தாளும் சூழ்சியின் மூலம் இன்று ஆட்சிகட்டிலில் அமர்ந்து அவர்களுடைய நீண்ட நெடிய திட்டத்தை அடைந்திருக்கின்றனர்.
இந்த வெற்றிக்கு பின்னால் எதிரிகளின் கடுமையான உழைப்பு, தியாகம், போராட்டம். இதற்கும் மேல் அவர்களது காலடியில் கொட்டிக் கிடக்கும் பொருளாதாரம் என இந்த வெற்றி அவர்களுக்கு எளிதில் கிடைத்தது அல்ல.
இவர்களுடைய ஆட்சியின் கீழ் முஸ்லிம் சமூகம் இரண்டு விதமான சோதனைகளை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
1. முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலைகள், வன்முறைகள், கற்பழிப்புகள்,பொருளாதார சூரையாடல்கள், மானம் இழக்கவைக்கும் தீவிரவாத முத்திரைகள். இவை நம் தலைமுறையில் கண்ணுற்ற நிகழ்வுகள். இந்த அநீதிகள் முஸப்பர் நகரிலிருந்து மல்லிப்பட்டினம் வரை தொடர்கிறது. இது ஒரு தொடர் கதைதான் அதை நாம் அறிந்தே வைத்திருகின்றோம்.
2. இவர்கள் ஆட்சியல் இருக்கும் காலத்தில் முஸ்லிம் சமூகம் தங்களது உரிமைகளை இழந்து, அடுத்த தலைமுறைவரை சரி செய்ய முடியாத அளவிற்கு அனைத்து துறைகளிலும் காவி சிந்தனை கொண்ட கயவர்களை உட்புகுத்திவிடுவார்கள். ஆட்சி மாறினாலும் இவர்களுடைய இஸ்லாமிய விரோத நடவடிக்கைகள் தொடரும் .
இவை இரண்டையும் எதிகொள்ள வேண்டிய காலகட்டத்தில் அல்லாஹ் நம்மை பொறுப்பாளர்களாக்கி, சோதனை களத்தை ஏற்படுத்தி இருக்கின்றான்.
இந்த சத்திய பிரச்சாரத்தை முன்னெடுக்கும் வேளையில் எதிரிகளின் எண்ணிக்கையையும், அவர்களின் பலத்தையும் கொண்டு அச்சுறுத்தப்படுவது இயற்கையே. இது எல்லா நபிமார்களும் அசத்தியவாதிகளிடம் சந்தித்த அச்சுறுத்தல்களே.
அடக்குமுறைகள், ஊர் விலக்கல்கள், காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகள் மூலம் அவர்கள் இந்த சத்திய பிரச்சாரத்தை முடக்கி விடலாம் என கனவு காண்கிறார்கள். ஆனால் இந்த உலகம் “சிஜ்ருள் முஃமினீன் வ ஜன்னதுல் காபிரூன்” (நம்பிக்கையாளர்களுக்கு சிறைச்சாலை, நிராகரிப்போருக்கு பூஞ்சோலை) என்பதை உணர்ந்தவர்களுக்கு உத்வேகத்தை மட்டுமே தரும். இறுதி வெற்றி நிச்சயம் அல்லாஹ்வை சார்ந்திருப்பவர்களுக்கே.
அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விட மாட்டான். (அல்குர்ஆன் 9:32)
நபி(ஸல்) காலத்தில் அனைத்து எதிரிகளும் ஒன்று திரண்டு அதிகமான படை பலத்துடன் நம்பிக்கையாளர்களை எதிர்த்த போதும் இதே அச்சுறுத்தல் தான் அவர்களுக்கும் விடப்பட்டது…. அதை அல்லாஹ் திருமறையில் சொல்கிறான்,
“இதை கேட்டவுடன் நம்பிக்கையாளர்கள் தளர்ந்து விடவில்லை மாறாக அவர்களது ஈமான் வலுப்பெற்றது…… அவர்கள் கூறினார்கள் “ஹஸ்பனல்லாஹ் வ நிஃமல் வகீல்” (எங்களுக்கு பொறுப்பேற்பதற்கு அல்லாஹ் போதுமானவன்).
“மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!” என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ”எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்” என்று அவர்கள் கூறினர். எனவே அவர்கள் அல்லாஹ்வின் அருளுடனும், நற்பேறுடனும் திரும்பினார்கள். அவர்களுக்கு எந்தக் கேடும் ஏற்படவில்லை. அவர்கள் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றனர். அல்லாஹ் மகத்தான அருளுடையவன். தனது நேசர்களை ஷைத்தான் தான் (இவ்வாறு) அச்சுறுத்துகிறான். எனவே நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்! ((அல்குர்ஆன் 3:173-175)
‘உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழியக் கூடியதாகவே உள்ளது’ என்றும் கூறுவீராக!(அல்குர்ஆன் 17:81)
இது தான் உறுதியாக இந்த சத்திய பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் ஒவ்வொரு இறை விசுவாசியின் தாரக மந்திரமாக இருக்க வேண்டும். துன்பங்களும், சோதனைகளும் இந்த சத்திய பிரச்சாரத்தில் பின்னிப் பினைந்தவை. அதன் மூலம் அல்லாஹ் நம்முடைய ஈமானை சோதிக்கின்றான் என்பதை ஒவ்வொருவரும் நினைவில் நிறுத்த வேண்டும்.சத்தியம் முன்னெடுத்து செல்லப்படும் ஒவ்வொரு காலகட்டத்திலும் அனைத்து பாத்தில்களும் (அசத்தியங்களும்) ஒன்று சேர்ந்து அதை எதிர்ப்பதை நாம் கண்கூடாக காண முடியும். அல்லாஹ் அந்த பாத்தில்களை ஒன்றுபடுத்தி சத்தியத்தை தெளிவானதாக்கி காட்டுகிறான்.
நபி(ஸல்) அவர்கள் மூன்று விதமான எதிரிகளை எதிர் கொண்டார்கள் (இணை வைத்த மக்கத்து முஷ்ரிக்குகள், யஹூதிகள் & நஸாராக்கள்). இவர்கள் அனைவரது கொள்கையும் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டதாக இருந்த போதிலும், முற்றிலும் வேறுபட்டதாக இருந்த போதிலும் அவர்களிடையே நபி(ஸல்) அவர்களுடைய சத்திய பிரச்சாரம் வந்த போது அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு இதை எதிர்த்ததை நாம் பார்க்கின்றோம்.
இன்றைக்கும் இதே நிலை. சத்தியத்தை எப்படியாகினும் எதிர்க்க வேண்டும் என்ற குறிக்கோள் மட்டுமே கொண்டு அசத்தியங்கள் ஒன்றுதிரண்டு பலம் போல காட்டி நிற்பதை நாம் காணலாம். ஆனால் உண்மையில் அவர்கள் உள்ளங்கள் நிச்சயமாக சிதறிக் கிடக்கின்றன.
(வ குலூபுகும் ஸத்தா)….. சத்தியம் மட்டுமே சிதறாமல் உறுதியாக நிற்கும் வல்லமை படைத்தது.எவ்வித சோதனைகள், துன்பங்கள் வந்த போதிலும் உறுதி குன்றாமல் நின்று சத்தியத்தை தம் இறுதி மூச்சுவரை கூறுவதே அந்த மாபெரும் வெற்றிக்கு நம்மை உரியவர்களாக ஆக்கிவிடும். அல்லாஹ் இதையே எதிரிகளை பார்த்து கூறுமாறு நபி(ஸல்) அவர்களுக்கு கட்டளை இடுகிறான்.
‘(வெற்றி அல்லது வீர மரணம் ஆகிய) இரண்டு நன்மைகளில் ஒன்றைத் தவிர வேறு எதையும் எங்களுக்கு எதிர் பார்க்கிறீர்களா? ஆனால் அல்லாஹ் தனது வேதனை மூலமோ, எங்கள் கைகளாலோ உங்களுக்குத் தண்டனை வழங்குவதையே நாங்கள் உங்களுக்கு எதிர்பார்க்கிறோம். நீங்கள் எதிர்பாருங்கள்! உங்களுடன் நாங்களும் எதிர்பார்க்கிறோம்’ என்று (முஹம்மதே!) கூறுவீராக! (அல்குர்ஆன் 9:52)
இந்த விஷயங்களை நாம் இங்கு நினைவு கூற காரணம் நாம் ஆவலோடு எதிர் நோக்கி காத்திருக்கும் ரமலான் நம்மை நெருங்கி கொண்டிருக்கின்றது. கடந்த ரமலானில் நம்மோடு நம்மாக இருந்தவர்கள் இன்று நம்மிடையே இல்லை. ரமலானை நாம் அடைவோமா? என்ற உத்திரவாதமும் இல்லை. ஆனால் இந்த ரமலான் தான் போராளிகளுக்கும், இஸ்லாமியவாதிகளுக்கும், அல்லாஹ்வின் மீது அன்பு வைத்திருப்பவர்களுக்கும், அவர் மார்கத்தின்பால் உழைக்க வேண்டும் என்பவர்களுக்கும் ஊக்க மருந்து. நோன்பு ஒன்றும் காலையில் தூங்கி மாலையில் எழுந்து ஈத்தம் பழம் கடிக்கும் சம்பிரதாயமல்ல. அது வெற்றியின் மாதம், வீரர்களின் மாதம், போராளிகள் தங்களது இலக்கை அடைய துடிக்கும் மாதம்.திரும்பிப் பாருங்கள் வரலாற்றுப் பார்வையில் நோன்பின் சாதனையை
- இஸ்லாத்தின் ஜீவ மரண போராட்டம் பத்ர் நோன்பு 17-ல் தான் முன்னூற்றுப் பதினேழு முஹம்மத்கள் (நபியை சார்ந்தவர்கள்) கொண்டு, ஆயிரம் அபூஜஹ்ல்களின் சரித்திரத்தை தோல்வியில் எழுதினான் அல்லாஹ்.
- ரமலான் 10-ல் தான் ஏழை வயிற்றுக்குள் ஸகாத்துல் ஃபித்ராவின் சரித்திரம் புகுந்தது.
- நோன்பு 9-ல் தான் அஹ்ஸாப் யுத்தத்தின் அடி மண்ணிலே வீர மறவர்களின் வியர்வை விழுந்தது.
- ரமலான் 21-ல் தான் தபூக் யுத்தத்தின் தடயங்களில் உரோமர்களின் உரோமங்களும் உதிர்ந்தது.
- ரமலான் 8-ல் தான் ஃபத்ஹ் மக்கா- மக்கா வெற்றியில் மானுட இருள் மண்டியிட்டு மறைந்தது.
- தாரிக் பின் ஸியாத் கடலின் கரையடைந்து வந்த கப்பலை கொழுத்தி வெற்றி அல்லது வீர மரணம் என்று களம் புகுந்து..ஸ்பெயினை இஸ்லாம் தழுவிக் கொண்டது ரமலான் 19.
- ஸலாஹுத்தீன் அய்யூபி சிலுவை யுத்தத்தில் திரித்துவ குழுக்களை சிலுவையில் அறைந்து விட்டு வியர்வை துடைத்த போது நோன்பு 29.
- ஐன் ஜாலூத்தில் தாத்தாரியர்கள் வியர்த்தோடிய போது நோன்பிற்கு வயது 7.
என் இனிய நண்பனே! தயாராகு இது இலையுதிர் காலமல்ல! தீமையின் கிளையுதிர் காலம். இந்த ரமலானை நாம் கைநீட்டி வரவேற்போம்.
நோன்பு – மரம், இந்த மரம் மனிதனுக்கு தண்ணீர் ஊற்றும்.
நோன்பு -சுவனத்து வாகனம் இது மனிதனின் இதயத்திற்கும் பெட்ரோல் ஊற்றும்.
- வலசை ஃபைசல்
0 கருத்துரைகள்:
Post a Comment