Thursday, June 19, 2014

தாமதமான நீதிக்கு என்ன பெயர்?

செய்யாத குற்றத்துக்காகச் சிறையில் வாடும் முஸ்லிம்கள்… அவர்கள் மீது சுமத்தப்படும் பழிகள்...
“இந்த வழக்கு, தேசத்தின் நேர்மை மற்றும் பாதுகாப்பு தொடர்பானது. வழக்கின் தன்மை துயரம்மிக்கது. இத்தகைய வழக்கை இவ்வளவு திறமையற்ற முறையில் புலனாய்வு அமைப்புகள் நடத்தியிருப்பது வேதனையளிக்கிறது. பல உயிர்களைக் கொன்றுகுவித்த உண்மையான குற்றவாளிகளுக்குப் பதிலாக, காவல் துறை அப்பாவிகளைக் கைதுசெய்து கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, தண்டனை வழங்கக் காரணமாக இருந்துள்ளது...

எனவே, மேல்முறையீட்டாளர்கள் அனைவரையும் விடுதலை செய்கிறோம். அவர்கள் மீதான குற்றச்சாட்டுக் கள் அனைத்தையும் தள்ளுபடி செய்கிறோம்.”

16-வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளி வந்த மே 16 அன்றுதான் இத்தீர்ப்பை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே. பட்நாயக் மற்றும் இ.கோபால் கெளடா ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கியது. 33 பேர் கொல் லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்பற்றிய தீர்ப்பு அது.

அக்‌ஷர்தாம் கோயில் தாக்குதல்

குஜராத் தலைநகர் காந்திநகரில் அக்‌ஷர்தாம் கோயில் மீது 24-9-2002 அன்று தாக்குதல் நடத்தத் தொடங்கிய பயங்கரவாதிகள், அடுத்த நாள் காலை வரை தாக்குதலைத் தொடர்ந்தனர். இதில் 33 பேர் கொல்லப்பட்டனர். 86 பேர் காயமடைந்தனர். இந்தக் கொலைக்கும் தாக்குதலுக்கும் காரணமான பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பயங்கரவாதிகளுக்கு உதவியவர்கள், அவர்களோடு சேர்ந்து சதி செய்தவர்கள் என்று ஆறு பேர் மீது பொடா சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்த நீதிமன்றம் 1.7.2006 அன்று தீர்ப்பு வழங்கியது. ஆதம்பாய் அஜ்மீரி, அப்துல் கயூம் முஃப்தீசாப் முகமது பாய், சந்த்கான் ஆகியோருக்கு மரண தண்டனையும், முகமது சமிம் ஹனீப் சேக்குக்கு ஆயுள் தண்டனையும், அப்துல்லாமியா யாசீன்மியாவுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், அல்ட்டாஃப் மாலீக்குக்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது.

இத்தீர்ப்பை குஜராத் உயர் நீதிமன்றம் ஜூலை 2010-ல் உறுதிசெய்தது. இதன் மீதான மேல்முறையீட்டின் மீதுதான் தண்டனைகளையும் குற்றச்சாட்டுகளையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. குற்றம் நிரூபணமாகவில்லை என்று நீதிமன்றம் சொல்லவில்லை. மாறாக, இவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்று விடுவித்தும், குற்றச்சாட்டுகளைத் தள்ளுபடி செய்தும் தீர்ப்பளித்துள்ளது.

குற்றச்சாட்டுகளைத் தள்ளுபடி செய்து தண்டனைகளை ரத்துசெய்ததற்கான பல காரணங்களை உச்ச நீதிமன்றம் தனது 281 பக்கத் தீர்ப்பில் கூறியுள்ளது. அதில், ஒரு அம்சத்தை மட்டும் இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

மரண தண்டனை விதித்ததற்குக் காரணமாக இருந்த வற்றில் முக்கியமானவை என்று பொடா நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்டவை, பயங்கரவாதிகளுக்கு ‘சதிகாரர்களால்' உருது மொழியில் எழுதப்பட்டதாகச் சொல்லப்பட்ட இரண்டு கடிதங்கள்.

இரண்டு பயங்கரவாதிகளும் குண்டுகளால் துளைக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். ஒருவர் உடலில் 46 குண்டுகளும், மற்றொருவர் உடலில் 60 குண்டுகளும் துளைத்திருந்தன. அவர்களின் ஆடைகள் முழுவதும் ரத்தமும் சேறுமாக இருந்தது. அப்படி இருந்தபோது அவர்கள் சட்டையில் இருந்த கடிதங்கள் மட்டும் புத்தம் புதிதாக மடிப்புக் கலையாமல் இருந்திருக்கின்றன. இதிலிருந்தே அவை, குற்றம்சாட்டப்பட்டவர்களை வழக்கில் சிக்க வைப்பதற்காகப் பின்னர் சேர்க்கப்பட்டவை என்பது எளிதில் விளங்கும்.

நீதி பிழைத்தது

உச்ச நீதிமன்றம் தீவிர கவனம் செலுத்தாமல் இருந்திருந்தால், நிச்சயமாக மூன்று பேரும் தூக்கிலிடப் பட்டிருப்பார்கள். அவர்களது குடும்பத்தினர்களும் உறவினர்களும் வழிவழியாக ஒதுக்கப்பட்டும், சபிக்கப்பட்டும் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பார்கள். எத்தனை கொடூரமான நிகழ்வு இது. ஆனால், பெரும்பாலான பத்திரிகைகள் இதுகுறித்து ஒரு வார்த்தைகூட எழுதவில்லை. இந்த உண்மை யாருக்கும் தெரியாமலேயே போய்விட்டது.

இப்படி நடப்பது முதல்முறையும் அல்ல. இதுவே, கடைசி முறையாகவும் இருக்கப்போவதில்லை.

8-9-2006-ல் மகாராஷ்டிரத்தின் மலேகானில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 37 பேர் கொல்லப்பட்டார்கள். 125 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கை விசாரித்த மகாராஷ்டிரத்தின் பயங்கரவாத எதிர்ப்புக் குழு மற்றும் சி.பி.ஐ-யால் முஸ்லிம் இளைஞர்கள் 9 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

2013 வரை ஏழு ஆண்டுகள் அவர்கள் அனைவரும் சிறையில்தான் இருந்தனர். சி.பி.ஐ. விசாரித்து, இந்த ஒன்பது பேரும் குற்றவாளிகள் என்று வழக்கைக் கொண்டுசென்ற பின்னர், எதிர்பாராதவிதமாக இந்தக் குற்றத்தைச் செய்ததாக அசீமானந்தா ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தார். இதன் பின்னர்தான் அந்த ஒன்பது முஸ்லிம் இளைஞர்களும் வெளியே வந்தனர். இல்லையேல், அவர்களில் சிலருக்குத் தூக்குத் தண்டனை கிடைத்திருக்கக் கூடும். அவர்களது குடும்பத் தினருக்குப் பழிச்சொற்கள் பட்டமாகக் கிடைத்திருக்கும்.

மிகப் பெரிய அவமானம்

இன்னொரு முக்கியமான வழக்கு, ஐதராபாத்தில் மெக்கா மசூதியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தொடர் பானது. இந்த வழக்கிலும் பின்னர் குற்றம்சாட்டப்பட்டு ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார் அசீமானந்தா. அதற்கு முன்னதாக 70 முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் 2013-ல்தான் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த மூன்று வழக்குகளும் ஒன்றை வெளிப்படுத்து கின்றன. முதலாவது வழக்கு, குஜராத்தில் நடந்தது. அங்கு பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. மலேகான் வழக்கும் மெக்கா மசூதி வழக்கும் காங்கிரஸ் ஆண்ட மாநிலங்களில் நடைபெற்றன. இந்த வழக்குகளை விசாரித்ததில் மாநிலத்தில் உள்ள புலனாய்வுக் குழுக்கள் மட்டுமின்றி மத்திய புலனாய்வுக் குழுவும் ஈடுபட்டுள்ளது. ஆயினும் அந்தக் குற்றங்களில் தொடர்பே இல்லாத 70 பேர், ஆறு ஆண்டுகள் முதல் 11 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். ஆளும் அரசு என்பதையும் தாண்டி, சிறுபான்மை வெறுப்பு அரசு நிறுவனங்களுக்குள்ளும் புகுந்திருப்பது ஆபத்தான அறிகுறி.

இவர்களில் பெரும்பாலானவர்களின் வயது 25-க்கும் குறைவு. இளமைக் காலத்தின் பொன்னான காலத்தைக் குற்றமேதும் செய்யாமலேயே சிறையில் கழித்துள்ளனர். வெளியே வரும்போது குடும்பமும் சமூகமும் இவர் களைச் சந்தேகத்துடனேயே பார்க்கும். ஒருவேளை இவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டிருந்தால், அவர்களின் சந்ததியும் ‘பயங்கரவாதிகளின் சந்ததி' என்று சமூகத்திலிருந்து விலக்கிவைக்கப்பட்டிருக்கும்.

இந்தியாவில் நீதி வழங்கும் முறைக்கும், ஜனநாயகத்துக்கும் இது மிகப் பெரிய அவமானம். ஆபத்தானதும்கூட. இன்று முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த ஆபத்து, நாளை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் என்பதை அனைத்துத் தரப்பினரும் மனதில் இருத்திக்கொள்ள வேண்டியது அவசியம்.

வெற்றி
inneram.com

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza