Sunday, January 26, 2014

சவூதி வாகன விபத்தில் கோமா நிலையில் இருந்த தமிழர் எஸ்.டி.பி.ஐ கட்சியின் முயற்சியால் நாடு திரும்பினார்!

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி தாலுகா, பெருமங்களம் பஞ்சாயத்து கீழ்நாரியப்பனூரை சேர்ந்த முதலி என்பவரின் மகன் பூமாலை (வயது 33). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த 2011 ம் ஆண்டில் வேலைக்காக வளைகுடா நாடான சவூதி அரேபியாவுக்கு சென்றார். அங்கு அவர் டேங்கர் லாரியில் ஓட்டுநராக பணி செய்து வந்தார்.
இந்நிலையில் வாகன விபத்து ஒன்றில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பூமாலை, நினைவு எதுவும் திரும்பாமல் கடந்த ஒன்றரை வருடங்களாக கோமா நிலையில் இருந்து வந்தார். இந்த விபரம் எஸ்.டி.பி.ஐ கட்சியின் நிர்வாகிகளுக்கு தெரிய வந்தது. இதையடுத்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் நிர்வாகிகள் சவூதியில் சமூக நல பணிகளை மேற்கொள்ளும் இந்தியா ஃப்ரெடர்னிட்டி ஃபோரத்தை தொடர்புகொண்டு அவரை இந்தியாவிற்கு அழைத்து வரும் முயற்சியை மேற்க்கொண்டனர். தொடர் முயற்சியின் காரணமாக கோமா நிலையிலிருந்து ஓரளவு நினைவு திரும்பிய நிலையில் அவரது ஊரை சேர்ந்த கோவிந்தராசு என்பவர் துணையுடன் இன்று (25-01-2014) சென்னை அழைத்து வரப்பட்டார்.

பூமாலையை சென்னை விமானநிலையத்தில் வரவேற்ற எஸ்.டி.பி.ஐ கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் காஞ்சி பிலால், துணைத் தலைவர் அன்சாரி, ஆலந்தூர் தொகுதி செயலாளர் ஹாரூண் ரஷீது ஆகியோர் பூமாலையை பெருமங்களம் பஞ்சாயத்து தலைவர் மருது மற்றும் பூமாலை மனைவி சங்கீதா ஆகியோரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து பூமாலையை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பூமாலையை தமிழகம் அழைத்துவர எஸ்.டி.பி.ஐ கட்சி மேற்கொண்ட மனிதநேய முயற்சிக்கு அவரது குடும்பத்தார் தங்களது நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.





0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza