Saturday, December 7, 2013

பாபரி மஸ்ஜிதை மீண்டும் அதே இடத்தில் கட்டவேண்டும்! – டெல்லி ஜந்தர் மந்தரில் பாப்புலர் ஃப்ரண்ட் தர்ணா


jantar

புதுடெல்லி: பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் கட்டக் கோரி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் டெல்லி மாநில பிரிவு சார்பாக ஜந்தர் மந்தரில் தர்ணா போராட்டம் நடந்தது.
தர்ணா போராட்டத்தில் கலந்துகொண்டு உரை நிகழ்த்திய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முன்னாள் தேசிய தலைவரும், தற்போதைய தேசிய செயற்குழு உறுப்பினருமான இ.எம். அப்துர் ரஹ்மான் தனது உரையில் கூறியது:
சுதந்திர இந்தியாவில் மகாத்மா காந்தி படுகொலைக்குப் பிறகு சங்க் பரிவாரம் நிகழ்த்திய மிகப் பெரிய பயங்கரவாதச் செயலே பாபரி மஸ்ஜித் இடிப்பு. பாபரி மஸ்ஜிதின் இடிப்பை மறக்கடித்து விடலாம் என்று சங்க் பரிவாரம் கனவு காண வேண்டாம்.

வரும் தலைமுறையினருக்கு இந்த நீதி மறுப்பின் நினைவலைகளை கொண்டு செல்வோம். பாபரி மஸ்ஜித் மீண்டும் அதே இடத்தில் கட்டப்பட்டே தீரும். மறக்காமலிருப்பதே ஃபாசிசத்திற்கு எதிரான போராட்டத்தின் முதல் நிலை. ஆகையால்தான் ஒவ்வொரு டிசம்பர் 6 ஆம் தேதி அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அதன் நினைவுகளை மக்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது.
1992-ஆம் ஆண்டு பாபரி மஸ்ஜித் இடிக்கப்படும்போது பூஜை அறையை மூடிக்கொண்டு உள்ளே இருந்த முன்னாள் பிரதமர் நரசிம்மராவ், பின்னர் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட அதே இடத்தில் கட்டித் தரப்படும் என வாக்குறுதி அளித்தார். ஆனால், இன்று அத்தகையதொரு உறுதிமொழியை அளிக்கக் கூட அவரது கட்சியால் இயலவில்லை.
பாபரி மஸ்ஜிதை மீண்டும் கட்டுவோம் என்ற வாக்குறுதியையாவது மதசார்பற்ற கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையில் கூற வேண்டாமா?
இவ்வாறு இ.எம். அப்துர் ரஹ்மான் கூறினார்.
ஆல் இந்தியா முஸ்லிம் மஜ்லிஸே முஷாவரா பிரதிநிதி அன்வாருல் இஸ்லாம் தனது உரையில்,”பா.ஜ.க.வும், காங்கிரசும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் உளவாளிகள். ஆர்.எஸ்.எஸ். முஸ்லிம் எதிர்ப்பு திட்டங்களை தீட்டுகிறது, காங்கிரஸ் கட்சி அதனை நடைமுறைப்படுத்துகிறது” என்று கூறினார்.
சீக்கிய யூத் ஃபாரம் தலைவர் ஹர்மிந்தர் சிங் தனது உரையில், “1992-ஆம் ஆண்டு பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட பிறகு பல வகையான எதிர்ப்புகள் நடந்தன. எதிர்ப்புகள் இன்றும் தொடருகின்றன. ஆனால், மஸ்ஜிதை மீண்டும் கட்டுவதற்கான அதிகாரம் உடையவர்கள் இது குறித்து சிந்திக்காதது அரசும், சங்க் பரிவாரமும் இடையேயான உறவுக்கான அடையாளமாகும். பாபரி மஸ்ஜிதின் இடிப்பைக் குறித்து வரும் தலைமுறையினருக்கு செய்தியை கொண்டு செல்ல இத்தகைய நிகழ்ச்சிகள் உதவும்” என்றார்.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ஷரஃபுத்தீன், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச் செயலாளர் இனாமுர் ரஹ்மான், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் டெல்லி தலைவர் அன்ஸாருல் ஹக் உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.

Source: thothu online.com

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza