பெங்களூர்: கர்நாடகா மாநிலம் பெங்களூர் மல்லேஸ்வரத்தில் உள்ள பா.ஜ.க. அலுவலகம் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டி கைது செய்யப்பட்ட நிரபராதிகளான 3 முஸ்லிம்களை ஆறு மாதங்களுக்குப் பிறகு ஆதாரங்கள் இல்லை என்று கூறி விடுவித்த சம்பவத்தில் கர்நாடகா போலீஸ் மீது அம்மாநில மனித உரிமை கமிஷன் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.
இவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க அரசுக்கு சிபாரிசு செய்யுமாறு முதன்மை செயலாளருக்கு மனித உரிமை கமிஷன் உத்தரவிட்டுள்ளது. நோட்டீஸ் கிடைத்து ஒரு மாதத்திற்குள் இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று மாநில மனித உரிமை கமிஷன் உறுப்பினர் சி.ஹெச். ஹுனுகட் முதன்மைச் செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளார்.
சென்னையைச் சார்ந்த பீர் முஹ்யித்தீன், சதாம் ஹுஸைன், தென்காசி ஹனீஃபா ஆகியோர் குற்றவாளிகள் அல்லர் என்று கூறி விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆறு மாதமாக பெங்களூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர்களுக்கு, குண்டுவெடிப்பில் தொடர்பை நிரூபிக்க போலீஸால் முடியவில்லை.
நிரபராதிகளை தீவிரவாதத்தின் பெயரால் சிறையில் அடைத்தது புலனாய்வு அதிகாரிகளின் கடுமையான தவறு என்று மனித உரிமை கமிஷன் கூறுகிறது. தேவையில்லாமல் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்படும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இழப்பீடுகள் வழங்க அரசுகளுக்கு சட்ட ரீதியாக தடைகள் ஏதுமில்லை என்றும் இழப்பீட்டிற்காக பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை அணுக உரிமை உண்டு என்றும் மனித உரிமை கமிஷன் சுட்டிக் காட்டியுள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment