சவுதி அரேபிய அரசு, சட்டவிரோதமாக நாட்டில் பணியாற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள், தங்களது பணி ஆவணங்களை சட்ட ரீதியாகத் திருத்திக்கொள்ள அளித்த காலக்கெடு முடிவடைந்த நிலையில், அங்கிருந்து நாடு திரும்பும் இந்தியத் தொழிலாளர்கள் அங்கு துன்புறுத்தப்பட்டதாக எந்த ஒரு புகாரும் இல்லை என்று வெளிநாடுவாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி கூறியிருக்கிறார்.
சமீபத்தில் சவுதி அரசாங்கம் நிதாகத் என்ற சட்டத்தை உருவாக்கியது. இந்தச்சட்டத்தின் கீழ் சட்டவிரோதமாக அங்கு தங்கியிருக்கும் வெளிநாட்டினர் திரும்பிச் செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. வெளிநாட்டு பணியாளர்களுக்கு பணி குறித்த ஆவணங்களை சட்ட ரீதியாக்க, அளித்திருந்த கால அவகாசம் நவம்பர் 4ம் தேதியுடன் முடிவடைந்தது.
அதனைத் தொடர்ந்து சவுதியிலிருந்து இந்தியாவிற்கு 1.34 லட்சம் இந்தியர்கள் திரும்பியுள்ளதாகக் கூறும் அமைச்சர் வயலார் ரவி, இதுவரை இந்தியர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் எந்த விதமான ஒரு இடைஞ்சலையும் ஏற்படுத்தவில்லை என்றார்.
மேலும் அந்நாட்டில் பணியாற்றி வரும் இந்திய தொழிலாளர்களுக்குத் தேவைப்படும் உதவிகளை இந்திய தூதரகம் செய்து வருகிறது என்றும் வயலார் ரவி தெரிவித்தார்.
0 கருத்துரைகள்:
Post a Comment