Friday, November 22, 2013

கண்காணிப்பு விவகாரம்: சிக்கலில் பா.ஜ.க!



புதுடெல்லி: மக்களவை தேர்தலுக்கு சில மாதங்களே மீதமுள்ள நிலையிலும், நான்கு மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரங்கள் ஓய்ந்துள்ள சூழலிலும் குஜராத் முதல்வரும், பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடி ரகசியமாக உயர் அதிகாரிகள், தனிநபர்களை கண்காணித்த விவகாரத்தை சமாளிக்க தெரியாமல் பா.ஜ.க தவித்து வருகிறது.
சாஹிபிற்காக(மோடி) உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷா, பெங்களூரைச் சார்ந்த ஆர்க்டிக்டான இளம்பெண்ணையும், குஜராத்தில் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியையும் தொடர்ந்து கண்காணிக்கும் பொறுப்பை போலீசிடம் ஒப்படைத்த செய்தியை இணையதள நியூஸ் போர்டல்களான குலைல் மற்றும் கோப்ரா போஸ்ட் ஆகியன வெளியிட்டது பா.ஜ.கவிற்கு அழுத்தத்தை கொடுத்து வருகிறது.

முன்னாள் குஜராத் ஐ.பி.எஸ் அதிகாரியும், இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு அப்பாவிகளை போலி என்கவுண்டரில் படுகொலைச் செய்த வழக்கில் குற்றவாளியுமான ஜி.எல்.சிங்காலுக்கு, பெங்களூர் இளம்பெண்ணையும், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியையும் கண்காணிக்க அமித் ஷா உத்தரவிடும் தொலைபேசி உரையாடல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.தான் பதிவுச் செய்த தொலைபேசி உரையாடல்களை பின்னர் இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு பேரின் போலி என்கவுண்டர் படுகொலை வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐயிடம் ஒப்படைத்திருந்தார் சிங்கால்.
தொலைபேசி உரையாடலில் குறிப்பிடப்பட்ட ‘சாஹிப்’ என்பவர் யார் என்பது தெளிவாக தெரியாமல் இருந்தது.ஆனால், செய்தி வெளியான மறு தினமே பா.ஜ.க தலையிட்டு, பெங்களூர் இளம்பெண்ணின் தந்தையிடம் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பை நடத்த அறிவுறுத்தியது.
இதன் பேரில் அப்பெண்ணின் தந்தை, செய்தியாளர்கள் சந்திப்பில்,’எனது மகளை கண்காணிக்க மோடியிடம் தனிப்பட்ட ரீதியில் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டார்’ என்று கூறினார்.இதன் மூலம் ‘சாஹிப்’ என்பவர் மோடி என்பது உறுதிச் செய்யப்பட்டது.மோடியை பாதுகாக்க முயன்ற பா.ஜ.கவிற்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
மகளிர் கமிஷன் தலையிடும் சூழல் உருவானபோது அப்பெண்ணின் தந்தையின் மூலம் கமிஷனுக்கு மேலும் ஒரு மனுவை எழுதிக்கொடுத்தது பா.ஜ.க.தனது மகளுக்கு தெரிந்தே மோடி அவளை கண்காணித்தார் .ஆகையால், மகளிர் கமிஷன் வழக்கு பதிவுச் செய்யக்கூடாது என்று விசித்திரமான கோரிக்கையை விடுத்திருந்தார்.
ஒரு பெண்மணி தன்னை கண்காணிக்க ஏன் ஒரு மாநில அரசுக்கு கோரிக்கை விடுக்கவேண்டும்?பாதுகாப்பு கோரினால் ஏன் அவரது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படவேண்டும்?இது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு பதில் கூற பா.ஜ.கவால் முடியவில்லை.
மோடியின் உளவு பார்வைக்கு இரையான முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி பிரதீப் சர்மா, மோடிக்கு எதிராக 2011-ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கு நேற்று முன் தினம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.தனது கட்சி தாரரின் தொலைபேசி உரையாடல்களையும், நகர்வுகளையும் மோடி கண்காணித்தார் என்ற புதிய புகாரையும் சர்மாவின் வழக்குரைஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.இவ்வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.இதன் மூலம் மோடி மீதான கண்காணிப்பு குற்றச்சாட்டு உச்சநீதிமன்றத்தையும் அடைந்துள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza