Wednesday, November 13, 2013

பாட்னா குண்டுவெடிப்பு: விசாரணையில் புதிய திருப்பம்!


patna

பாட்னா: பீகாரில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கின் விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
முன்னர் இந்தியன் முஜாஹிதீன் மீது குற்றம் சாட்டப்பட்ட இச்சம்பவத்தில் புதிய கைதுகளை தொடர்ந்து வழக்கு புதிய திசையை நோக்கி பயணிக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
ஜார்கண்டில் தன்பாத் மாவட்டத்தில் ராஜு ஸாவு என்பவர் இவ்வழக்கில் புதியதாக கைது செய்யப்பட்டுள்ளார். என்.ஐ.ஏ.விடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் பீகார் போலீஸ் ராஜு ஸாவுவை தன்பாத்தில் ஜாரியாவில் வைத்து கைது செய்தது.

இவருடைய சகோதரர்களான ஜிதேந்திர ஸாவு, பப்பு ஸாவு, பிட்டு ஸாவு ஆகியோரை தேடி நடத்திய விசாரணையில் ராஜு ஸாவு கைது செய்யப்பட்டார்.
அவரது சகோதரர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. ராஜு ஸாவு, விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார். மூன்று மாதங்களுக்கு முன்பு லகிஸராயில் ஆறு பேரை என்.ஐ.ஏ. கைது செய்திருந்தது. ஏராளமான பாஸ் புக்குகள், ஏ.டி.எம். கார்டுகள் மற்றும் ஆவணங்கள் ரெய்டில் பறிமுதல் செய்யப்பட்டன.
இவர்களில் கோபால் குமார் கோயல், விகாஸ் குமார், பவன் குமார், கணேஷ் குமார் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்தார்கள் என்பது இவர்கள் மீதான குற்றமாகும். பாகிஸ்தானில் ஐ.எஸ்.ஐ.யுடன் இவர்களுக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
கோபால் குமாரிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் போலீஸ் குழு தன்பாத்திற்கு சென்றது. கடந்த 3 தினங்களில் பீகாரில் பல்வேறு மையங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தியது.
புதிய கைதுகளை தொடர்ந்து பாட்னா குண்டுவெடிப்பில் ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் பங்கு குறித்தும் விசாரணை நடைபெறும் என கருதப்படுகிறது. நரேந்திர மோடியின் தேர்தல் பிரச்சாரத்தில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் குண்டுவெடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளார்கள் என்று ஐ.பி. முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தது.
குண்டுவெடிப்பு நிகழ்ந்து நான்கு தினங்கள் கழித்து போலீஸ் பிடித்த பங்கஜ் என்பவரைக் குறித்து பின்னர் தகவல் ஏதுமில்லை. பங்கஜ் தொடர்பான மர்மம் நீடிக்கிறது. தான் ஒரு பா.ஜ.க. தொண்டர் என்பதை பங்கஜ் சுயமாக தெரிவித்திருந்தார் என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
ஆனால், தற்போது பங்கஜ் குறித்து ஏன் எந்த தகவலும் வெளியாகவில்லை என்று பாட்னாவை மையமாக கொண்டு இயங்கும் செய்தி இணையதளம் ஒன்றின் எடிட்டர் இர்ஷாதுல் ஹக் கேள்வி எழுப்புகிறார். பங்கஜிடம் விசாரணை நடத்தி விட்டு அனுப்பிவிட்டார்களா என்றும் இர்ஷாத் கேட்கிறார்.

-http://www.thoothuonline.com

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza