இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
நாடு முழுவதும் தீவிரவாத சம்பவங்களை காரணம் காட்டி ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் வாடுகின்றனர். நூற்றுக்கணக்கானோர் 10 வருடங்களுக்கு மேல் சிறையில் வாழ்க்கையை இழந்த பிறகு நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இப்படி அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்படுவதற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ கட்சி தேசம் முழுவதும் போராட்டங்களையும், பிரச்சாரங்களையும் செய்து வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு ஒரு வழக்கின் தீர்ப்பின்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.சி. டட்டு மற்றும் சந்திர மௌலி ஆகியோர், தாங்கள் முஸ்லிம்கள் என்ற காரணத்தால் மட்டுமே கைது செய்யப்படுகிறோம் என்ற எண்ணம் அப்பாவி முஸ்லிம்கள் மனதில் தோன்றாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என அரசுகளையும், காவல்துறை அதிகாரிகளையும் கேட்டுக் கொண்டனர்.
இந்நிலையில், தற்போது உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, முதலமைச்சர்களுக்கு இதுபற்றி கடிதம் எழுதியிருப்பது வரவேற்கத்தக்கது. இருந்தபோதிலும், கடிதம் எழுதுவது மாத்திரமே அவரது பணியல்ல; அப்பாவி முஸ்லிம்களை சிறையில் இருந்து விடுவிக்கவும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கு உட்பட சில வழக்குகளில் அண்மை காலமாக 15 க்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்குகள் ஜோடிக்கப்பட்டவை என்பதையும், அதற்கான காரணங்களையும் தமிழக அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் உரிய முறையில் எடுத்துச் சொல்லியும், பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கடந்த 2006 ஆம் ஆண்டு, கோவையில் பெரும் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக 4 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாக செய்தி வெளியிடப்பட்டது. ஆனால் இதுபற்றி விசாரணை செய்த சிறப்பு புலனாய்வு பிரிவு, இந்த வழக்கே போலியானது என்று நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இதன்பிறகும் கூட, இதற்கு காரணமான ரத்னசபாபதி உட்பட அதிகாரிகள் மீது இதுவரை நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை.
உள்துறை அமைச்சரின் கடிதத்தின் அடிப்படையில் தமிழக முதல்வர் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, வழக்கிற்கு சம்மந்தமில்லாத முஸ்லிம் இளைஞர்கள் விடுதலை செய்யப்படவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment